*உணவில் பாதாம் சத்துக்கள் அவசியம்*
*உணவில் பாதாம் சத்துக்கள் அவசியம்*
வித்தியாச சுவையில் நட்ஸ் ஃபுட்
நட்ஸ்சில் உள்ள சத்துக்கள் பற்றிய பல அறிந்து இருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் இருக்கிறது. இயற்கையில் விளைகின்ற பல பருப்பு, தானிய வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதாம் பருப்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. வாரத்தில் ஒரு நாள் அசைவம் சாப்பிடுவது போல சமையலில் பாதாமை சேர்த்து சமைக்கலாம்.
அப்படி செய்யும் போது உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கின்றது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது. இந்த பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். இவற்றை தவிர அதில் சிறப்பு உணவுகளை சமைத்தும் சாப்பிடலாம். கிச்சன் வாசகிகளுக்காக மூன்று பிரத்யேகமான பாதாம் ரெசிப்பிக்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஆல்மண்ட் ஸ்வீட் பொட்டேடோ டோஸ்ட்
தேவையானவை:
தோல் உரிக்கப்படாத பாதாம் - 3/4 கப்
பிரட் துண்டுகள் - 4
வட்டமாக வெட்டப்பட்டு ரோஸ்ட் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 2 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1/2 டீஸ்பூன்
கிரீன் சட்னி - 1 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
மயோனைஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை:
பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அதேபோல் பிரட் துண்டுகளையும் நன்கு டோஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் வறுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நறுக்கிய பாதாமினை தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகள் மேல் சர்க்கரை வள்ளி கிழங்கு துண்டுகளை வைத்து அதன் மேல் கலந்த மசாலாக்களை பரப்பி அதன் மேல் பாதாமினை தூவி பரிமாறவும். குழந்தைகள் விரும்பும் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்துள்ள காலை உணவு.
ஆல்மண்ட் காலிஃபிளவர் ரைஸ் சாலட்
தேவையானவை:
தோல் உரிக்கப்படாத பாதாம் - 1 கப்,
துருவிய காலிஃபிளவர் - 2 கப்,
உப்பு - சுவைக்கு ஏற்ப,
'மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் துருவிய காலிஃபிளவரை சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். அதன் பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அதில் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை, மிளகுத்தூள், உப்பு மற்றும் பாதாமினை சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான சத்துள்ள சாலட். டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் ஆரோக்கியமான உணவு.
ஆல்மண்ட் அமரந்த் கபாப்
தேவையானவை:
பாதாம் பருப்பு - 1/2 கப்,
அமரந்த் பொடி - 1/2 கப்,
பாதாம் மாவு - 1/2 கப்,
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,
வேகவைத்த மசித்த உருளை - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - பொரிக்க,
நறுக்கிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி.
செய்முறை:
பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அமரந்த் பொடி, பாதாம் மாவு, நறுக்கிய பாதாம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வேகவைத்த மசித்த உருளை, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா பவுடர், கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடைபோல் தட்டி வைக்கவும். எண்ணெய் சூடானதும் பொரிக்கவும். கிரீன் சட்னியுடன் பரிமாறவும். மாலை நேர சுவையான ஸ்னாக்ஸ்.
தொகுப்பு:- ப்ரியா...
Comments