*தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு*
*தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு*
இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவானது, தமிழ்நாட்டிற்குள் எப்படி வந்தது என்பது குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.
சென்னை: இந்துக்களின் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் விநாயகருக்கென ஒரு வரலாறு உள்ளது. சிவன்-பார்வதி தம்பதியின் மகனாகவும், உலகை சுற்றுவரும் போட்டியில் சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து பழத்தை வாங்கிய கதையையும் நாம் நிச்சயம் கேட்டிருப்போம். விநாயகருக்கு கணேசன், கணபதி, ஆனைமுகன், பிள்ளையார், கணநாதன், ஒற்றைக்கொம்பன், தும்பிக்கை ஆழ்வார், விக்னேஸ்வரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது.
சுதந்திர போராட்டக் காலத்தில், அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டுதோறும் பொதுமக்களிடையே தேசிய பற்று வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார். தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் 3ஆவது நாள் அல்லது 5ஆவது நாளில் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட நாள்களில் பூஜைகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது. முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்படுகிறது
இப்படிப்பட்ட விநாயகர் சதுர்த்தி தமிழ்நாட்டிற்குள் வந்த வரலாறு குறித்து காணலாம். சிறுத்தொண்டர் எனும் பரஞ்சோதியோர், நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவனாகச் சென்று வாதாபி எனும் தொன்னகரைத் வென்றார். அங்கிருந்த கணபதி சிலையை கொண்டு வந்து திருச்செங்காட்டங்குடியில் நிறுவி வழிபட்டார்.
அதற்கு வாதாபி கணபதி என்று பெயரிடப்பட்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை சங்ககால தமிழ் இலக்கியம், கல்வெட்டு, அகழ்வாய்வு போன்றவற்றில் கணபதி வழிபாடு இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. அதே சமயம் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டில் விநாயகர் சிலை வழிபாடு குறித்து திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் விநாயகருக்கான விழா எடுக்கும் நிகழ்வு தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வந்தது.
இந்த ஆண்டு(2022) ஆகஸ்ட 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது
புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் காரணமாக சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகர் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில் விநாயகர் சிலையை கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கும் போது அதிகப்படியான நீர் மாசு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அந்த காலகட்டங்களில் விழாக்கள் கொண்டாடுவது ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருக்க கொண்டாடப்பட்டது.
Comments