பிறந்தநாள் - கே. பாலச்சந்தர்

 பிறந்தநாள் - கே. பாலச்சந்தர்

--



எந்த சமூகத்தில் இருந்து ஒரு படைப்பாளி வெளிவருகிறானோ, அந்த சமூக பிரதிபலிப்பே  தன் படைப்புகளில் ஒளிரும்...!


அப்படித்தான் பாலச்சந்தரும்..!

இவர் படங்கள் ஒன்றும்  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை இல்லை..! சில படங்கள் நெருடலானவை, அபத்தமானவை.. நடைமுறைக்கு ஒவ்வாதவை..!


இடஒதுக்கீடு எதிர்ப்பு, ஏகாதிபத்திய ஆதரவு, பலவந்தமான இந்தி திணிப்புகளும், ஆங்காங்கே சிதறி கிடக்கும் இவரது படங்களில்..


படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கையை "வறுமையின் நிறம் சிவப்பு".. படம் ஏற்படுத்தி விட்டது.. கமல் கையில் சவர கத்தியை பிடிக்க வைத்து எதை உணர்த்த முற்பட்டார்?  சுயதொழிலையா? குல தொழிலையா? தெரியவில்லை.


ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் சில படங்களையும் தந்திருக்கிறார்.‌.. அதேசமயம், இடஒதுக்கீடு எதிர்ப்பு, மதமாற்ற கண்டிப்புகளை சில படங்களில் மறைமுகமாக புகுத்தியதையும் மறுக்க முடியாது..!


அதுவும் அந்த காலகட்டம் என்பது கொந்தளிப்பான காலகட்டமாகும்.. எத்தனையோ போராட்டங்களை நடத்தி, அதன்மூலம், விளிம்பு நிலை மக்களின் முதுகெலும்பை, ஓரளவேனும் நிமிர்த்தி விட வேண்டும் என்று தந்தை பெரியார் போராடிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது..!


தாழ்த்தப்பட்ட மக்கள், இட ஒதுக்கீடு காரணமாக, அரசுத் துறைகளில் கடினமாக கால் பதித்து கொண்டிருந்த காலகட்டம் அது.. அப்போதுதான் பாலச்சந்தரின் "புதுமை" படங்கள் வெளிவந்தன.


"அரங்கேற்றம்" படத்தில் உயர்குடி பெண் வறுமை காரணமாக விபச்சாரம் செய்ய நேரிடுவதாக காட்சிப்படுத்தியிருப்பார்.. "வானமே எல்லை" படத்தில், உயர்குடி இளைஞர், வேலை கிடைக்காமல் தற்கொலை முடிவை எடுப்பது போல் சித்தரித்திருப்பார்.. எவ்வளவு பெரிய முரண்பாடு இது? 


அன்று முதல் இன்று வரை, அரசு துறைகளில் யார் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை அறிந்தாலே, இதற்கு விடை கிடைத்துவிடும்.


"அண்ணாவை உயர்த்துவதே, பெரியாரை மட்டம் தட்டுவதற்காகதான் என்றும், "அச்சமில்லை அச்சமில்லை", "தண்ணீர் தண்ணீர்" படங்களில் பெரியாரின் கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்புக் கருத்துக்களை கடுமையாக கண்டித்தும், கேலி செய்தும் இருக்கிறார் என்றும் எதிர்மறை விமர்சனங்கள் இன்றுவரை நடந்து கொண்டுதானிருக்கிறது.


அதேசமயம் - பாலச்சந்தரின் நிறைகளையும் நாம் மறக்காமல் போற்ற வேண்டி உள்ளது...!


ஏராளமான பெண்களின் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து படம் எடுத்தவரும், காதலை வகை வகையாய் காட்டியவரும், அந்த காதலை வெளிப்படுத்த ஏராளமான உத்திகளை கையாண்டவரும் கே.பாலச்சந்தர் தான்..!


தான் வாழும் காலம் வரை திருவள்ளுவரையும் பாரதியையும் ரசிகர்களுக்கு நினைவூட்டி கொண்டிருந்தவர் கே.பாலச்சந்தர்..!


தாலி கட்டிவிட்டதால் மட்டுமே, உணர்ச்சி செத்த பொம்மையாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதை உணர்த்த, அத்தாலியை கழட்டி கோயில் உண்டியலிலேயே போடும் துணிச்சலை தன் ஹீரோயின்களுக்கு தந்தவர் கே.பாலச்சந்தர்..!


ஓடிப்போன கணவர் திரும்பி வந்தாலும், திருந்தி வந்தாலும் அவனை அரவணைத்து ஏற்றுக் கொள்ளும் பண்பாட்டு பக்குவத்தை அந்த ஹீரோயின்கள் மூலம் நிரூபித்தவரும்  கே.பாலச்சந்தர்..!


எண்ணற்ற இளம் கலைஞர்களையும்,  தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கியவர் பாலச்சந்தர்..!  


எல்லாவற்றுக்கும் மேலாக என் அப்பாவுடன் (டி.எஸ்.ரவீந்திரதாஸ்) வுடன் மிக நெருக்கமான உறவு கொண்டவர் பாலச்சந்தர்...!


பல முரண்பட்ட படங்களையும், பார்ப்பனீயத்துக்கு ஆதரவான படங்களையும், கடுமையாக எதிர்த்தும், என் அப்பா 70, மற்றும் 80களில் விமர்சனங்களை எழுதுவார்.. (இந்த துணிச்சல், அப்போதைய பத்திரிகைகளில் ஒரு சிலருக்கு மட்டுமே இருந்தது)


அதை படித்த பாலச்சந்தர்,  "ஏன் தாஸ், என் படங்களை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்யறீங்களே" என்று போன் செய்து திட்டுவார்... பிறகு, மீண்டும் மீண்டும் அதே விமர்சனங்களை படித்து பார்த்து, இறுதியில் அப்பாவை கூப்பிட்டு பாராட்டிய தருணங்கள் ஏராளம்..  நடிகர் ராஜேஷ் போலவே, சீக்கிரத்திலேயே அப்பாவின் எழுத்துக்கு சிறந்த வாசகராகி போனவர்..!


என் அப்பா எழுதிய பல புத்தங்களுக்கு, கலைஞர் கருணாநிதிக்கு பிறகு, அதிக அளவு முன்னுரைகளை எழுதி,  அவைகளை வெளியிட்டவரும் பாலச்சந்தர்தான்...!


எங்கள் வீட்டு கல்யாணங்களுக்கு வந்திருந்து, எங்களை மனசார ஆசீர்வதித்தவர் என்பதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன்..!


உறவு சிக்கலையும், உளவியல் சிக்கலையும் தன் படங்களின் கேரக்டர்களில் கொண்டு வந்து கொட்டி, தமிழக மக்களை கிறுகிறுத்து விழ செய்ததுடன், புதுமை + புரட்சி செய்தவர் கே.பாலச்சந்தர்...  இது மாற்ற முடியாத திரையுலக உண்மை..!  


இந்தியாவின் வடக்கில் உள்ளதுபோல், தெற்கு பகுதியில் தோன்றிய இந்த "சிகரம்" காலத்துக்கும் உயர்ந்து நிற்கும்.. என்றும் கம்பீரமாய்.. பிரம்மாண்டமாய்.. ஒய்யாரமாய்..!


- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

Hemavandana

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி