காற்றுப்பதன (ஏசி)
வரலாற்றில் இன்று ஜூலை 17
1902 - உலகின் முதல் மின்சாரத்தால் இயங்கும் காற்றுப்பதன (ஏசி) எந்திரத்தை, வில்லிஸ் கேரியர் என்ற 25 வயது அமெரிக்க இளைஞர் வடிவமைத்தார். உண்மையில், அவர் பணிபுரிந்த அச்சக நிறுவனத்தில், காற்றின் ஈரப்பதத்தால் காகிதங்கள் சுருக்கமடைவதையும், மை காயாமல் அச்சிடப்பட்டவை கலைவதையும் தடுப்பதற்காக, காற்றின் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தி, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் ஓர் எந்திரத்தை வடிவமைத்தார். அதுவே காற்றுப்பதன வசதியின் தொடக்கமாக அமைந்தது. மிகப் பழங்காலத்திலிருந்தே, கட்டிடங்களைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடக்கத்தில் மலைப்பகுதிகளிலிருந்து பனிக்கட்டிகளைக் கொண்டுவந்து குளிர்வித்தனர். எகிப்தில், சாளரங்களில் நாணல்களை ஈரப்படுத்தித் தொங்கவிட்டு, அவற்றிலிருந்து சொட்டும் நீர் ஆவியாவதன்மூலம் குளிர்வித்துள்ளனர். பண்டைய ரோமில், சுவர்களுக்குள் நீர் செல்லும் பாதைகள் அமைக்கப்பட்டு, அவற்றில் நீரைச் செலுத்திக் குளிர்வித்துள்ளனர். சீனாவில், 2ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய சுழல் விசிறிகளை, கைதிகளைக்கொண்டு இயக்கி குளிர்வித்துள்ளனர். க1758இல் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஆவியாதலின்போது வெப்பம் உறிஞ்சப்படுவதால் குளிர்ச்சி ஏற்படும் என்றும், 1820இல் மைக்கேல் ஃபாரடே, திரவமாக்கப்பட்ட அம்மோனியா ஆவியாகும்போது காற்றைக் குளிர்விக்கும் என்றும் கண்டறிந்தது பனிக்கட்டியைச் செயற்கையாக உருவாக்க அடித்தளமிட்டது. 1842இல் ஜான் கோரி என்ற அமெரிக்க மருத்துவர், பனிக்கட்டி உருவாக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கி, அதன் வழியாகக் காற்றைச் செலுத்தி குளிர்விக்கும் முறையை உருவாக்கினாலும், அது வணிக அடிப்படையில் வெற்றிபெறவில்லை. கேரியர் 1902இல் காற்றுப்பதன எந்திரத்தை உருவாக்கிவிட்டாலும், 1906இல் நூற்பாலையில் நூல்களில் ஈரப்பதத்தைப் பராமரிப்பதற்காக, ஏர் கூலர் போன்ற ஒன்றை ஒருவாக்கிய ஸ்டூவர்ட் க்ராமர் என்ற பொறியாளரே ஏர் கண்டிஷனர் என்ற பெயரை முதலில் பயன்படுத்தினார். 1911இல் குளிர்வித்தல் குறித்து கேரியர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை, இத்துறையின் மேக்னா கார்ட்டா என்று புகழப்படுகிறது. 1931இல் சன்னலில் பொருத்தும் ஏசியும், 1939இல் கார்களுக்கான ஏசியும் உருவாக்கப்பட்டன.
Comments