கோவை ஞானி கோவை பிறந்த நாள்
இன்று ஜூலை 1, 1935 எழுத்தாளரும் மார்க்சிய ஆய்வாளருமான கோவை ஞானி கோவை பிறந்த நாள். ஞானியின் இயற்பெயர் பழனிச்சாமி ஆகும். கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வந்தார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர். மார்க்சியப் பார்வையில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை இவர் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம், மெய்யியல் குறித்தும் பல நூல்களை வெளியிட்டார். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மார்க்சிய இதழாகிய புதிய தலைமுறையோடும் வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் பரிமாணம், நிகழ் , தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.
புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது, கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது ‘இந்து தமிழ் திசை’ வழங்கிய சாதனையாளர் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்
கோவை ஞானி ஜூலை 22, 2020 அன்று தனது 86-வது அகவையில் மரணமுற்றார்
Comments