விரதங்களின் மாதம்!
விரதங்களின் மாதம்!
ஆடி மாதத்தில் திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் வேண்டியும், திருமணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வர்.
இந்தியா என்றாலே விழாக்கள்தான், பண்டிகைகள்தான். அதுவும் நம் தமிழகத்தில் நாள்தோறும் ஆன்மிக விழாக்கள்தான். ஆன்மிக விழாக்கள் தமிழ் மாதங்களை அடிப்படையாய் கொண்டது. தமிழ் மாதங்களில் சித்திரை, தை மாதங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது போலத்தான் ஆடி மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமாக வருவது ஆடி மாதம். இந்த வருடம் 2022 ல் ஆடி மாதம் ஜூலை 17ம் தேதியானஅன்று பிறக்கவுள்ளது.இக்காலத்தில் சூரிய வெப்பம் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். பொதுவில் தமிழ் மாதங்கள் சிலவே. அம்மாதங்கள் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரை மாதத்தின் பெயராக பெற்றுள்ளன.
சித்திரை நட்சத்திரம் - சித்திரை மாதம்
விசாக நட்சத்திரம் - வைகாசி மாதம்
ஆஷாட நட்சத்திரம் - ஆஷாட மாதம் -
ஆடி மாதம்
இது தட்சிணாயன கால ஆரம்பம். அதாவது தெய்வங்களுக்கு இரவு நேரம். இக்காலத்தில் தெய்வங்களை வழிபடுவதினையே நம் முன்னோர்கள் சிறப்பு எனக் கூறுகின்றனர். இக்காலம் அதிகம் சக்தி வழிபாட்டிற்கு உரிய காலம். தேவர்களும் இக்காலத்தில் சக்தி உபாசனையிலேயே இருக்கின்றனர்.
ஆடி மாதத்தில்தான் எத்தனை விசேஷங்கள்
மாதப்பிறப்பினை ஆடிப்பிறப்பு என்று கொண்டாடுகின்றோம். வீட்டு வாசலிலும் பூஜை அறை யிலும் அரிசி மாவினால் பெரிய கோலம் இட்டு காவி மண் பூசி அலங்கரிப்பர். மாவிலை தோரணம் கட்டி வீட்டினை தூய்மை படுத்துவர்.ஆடி மாதம் பிறந்த உடனேயே கோவிலுக்குச் சென்று வருவர். பலர் மாத தர்ப்பணம் செய்வர். பாயாசம், வடை, போளி என விருந்து சமையல் நடைபெறும். புதிதாய் கல்யாணம் நடந்திருந்தால் பெண், மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைப்பர். தாலிக்கயிறு மாற்றுவர்.
இது தட்சிணாயன புண்ய காலம். இனி வரும் 6 மாதமும் தேவர்களின் இரவு நேரம். எனவே தெய்வ வழிபாடு தொடர்ந்து இருக்கும்.
ஆடி செவ்வாய்
முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய் அன்று முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வர். பலர் விரதம் இருப்பர். மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மூன்றுமே சக்தி வழி பாட்டிற்கு உகந்ததாகக் கூறப்படுகின்றது. செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோயிலுக்கு குறிப்பாக துர்க்கை அம்மன் கோயிலுக்கு செல்லும் பெண்கள் அதிகம் இருப்பர்.
திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணம் ஆன பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைப்பது, கூழ் ஊற்றுவது அனைத்து அம்மன் கோயில்களிலும் காணப்படும் ஒன்று. அம்மனுக்கு வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை, சிவப்பு அரளி மாலை இவை சிறந்ததாகக் கூறப்படுகின்றது.
இரவு நேரங்களில் கோயில்களில் பாட்டு கச்சேரிகள் நடைபெறும். ஆடி செவ்வாய் அன்று வீட்டில் நைவேத்தியம் செய்பவர்கள் அநேகமாய் பல காய்கறிகளை கலந்த சாம்பார் சாதத்தினைச் செய்வர்.வெள்ளிக்கிழமைகளில் பார்வதி, காமாட்சி, மீனாட்சி அம்மன்களுக்கு நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வைத்து வழிபடுவர். வீடுகளில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் இருக்கும்.
ஆடி மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளை மிக சிறப்பாக கொண்டாடுவர். ஆடி முதல் வெள்ளி அன்று லட்சுமியினை வாழ்வில் வரம் வேண்டி வழிபடுவர். ஆடி இரண்டாம் வெள்ளி அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை இவர்களை அறிவு வேண்டி வழிபடுவர். ஆடி மூன்றாம் வெள்ளி அன்று அன்னை பார்வதி, காளி மாதா இவர்களை தைரியம், வளம் வேண்டி வழி படுவர்.ஆடி நான்காம் வெள்ளி அன்று காமாட்சி அன்னையை தன் உறவுகளோடு இன்பமாய் வாழ வழிபடுவர்.ஐந்தாம் வெள்ளி - வரலட்சுமி பூஜை ஆகும். பவுர்ணமிக்கு முன்னே வரும் இந்த பூஜையினைச் செய்வது அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக அமையும்.
ஆதி லட்சுமி
தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி.என அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக இப்பூஜை அமையும். இந்த பூஜையின் முக்கியத்துவத்தினை சிவபிரான் அன்னை பார்வதியிடம் கூறுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கேட்கும் வரத்தினை அருள்பவள் வரலட்சுமி. சிலர் கலசம் வைத்தும், சிலர் படம் வைத்தும் பூஜை செய்வர். வண்ண கோலம், வாசனைப்பூக்கள், தாம்பூலம், நெய்விளக்கு, மாவிலை தோரணம், அம்மனுக்கு இயன்ற அலங்காரங்கள் என வீடே தெய்வீக கோலமும், மணமும் பெறும்.
வரலட்சுமி விரதம்
பெண்கள் விரதம் இருந்து அவரவர் குடும்ப சம்பிரதாயத்திற்கேற்ப பூஜையினை மேற்கொள்வர். மாலையில் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலம், பிரசாதம் கொடுத்து உபசரிப்பர்.
அன்று கோயில்களிலும் சரி, வீட்டிலும் சரி அம்மன் அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சக்தி பிரவான மாதமான ஆடி மாதத்தில் உச்சக்கட்டமாக சக்தி பூஜையாக வரலட்சுமி பூஜை மிகுந்த நிறைவினைத்தரும்.
ஆடி கிருத்திகை
கார்த்திகை பெண்கள் ஆறு பேர் கந்தனை பாலூட்டி வளர்த்த காரணத்தினால் முருகனுக்கு சிவபிரான் கார்த்திகேயன் என்ற பெயரினை அருளினார். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருப்போருக்கு முருகப் பெருமான் அனைத்து நலன்களையும் வழங்குவார் என்பது முன்னோர் வாக்கு. அதுவும் ஆடி கிருத்திகை அன்று வழிபடுவது கூடுதல் விசேஷம் ஆகும். ஆடி கிருத்திகை, தை பூஜைகளும் முருக பிரானுக்கு விசேஷமாகப் கூறப்படுகின்றது. பொதுவில் கிருத்திகைக்கு முதல் நட்சத்திரமான பரணியின் பொழுதே விரதத்தினை ஆரம்பிப்பர்.
கிருத்திகை அன்று முழு உபவாசம் இருந்து மாலை கோவிலுக்குச் சென்ற பிறகே உணவு அருந்துவர். முழு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால். பழம் அருந்தி விரதம் இருப்பர். சிலர் மறுநாள் ரோகிணி நட்சத்திரம் வரை விரதத்தினை தொடர்வது உண்டு. தமிழ் கடவுளான முருகனுக்கு பக்தர்கள் அதிகம் என்பதால் முருகப்பெருமானின் அனைத்து விழாக்களும் மிகச் சிறப்பாகவே கொண்டாடப்படுகின்றது. ஆடி கிருத்திகை அன்று கோயில்களில் பால் அபிஷேகம் செய்வது, முருகனுக்கு காவடி எடுப்பது போன்ற வேண்டுதல்களைச் செய்வர்.
ஆடி அமாவாசை
உயிரோடு இருப்பவர்கள் நன்கு நீடுழி வாழ அவர்கள் பிறந்த நட்சத்திரம் அன்று அவர் பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்கின்றோம்.மறைந்தவர்கள் மோட்சம் அடைய அவர்கள் இறந்த திதி அன்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்கின்றோம். அமாவாசை அன்று சூரியன், சந்திரன் இருவரும் ஒரே ராசியில் இருப்பதால் இது ஒருவரின் தந்தை, தாயினை குறிக்கின்றது. ஆகவே அமாவாசையில் முன்னோருக்கு வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதுவும் ஆடி அமாவாசை அன்று சந்திரனின் வீடான கடகத்தில் சூரியனும், சந்திரனும் இருப்பது விசேஷமானது. ஆடி மாதம் தட்சிணாயன காலத்தில் அமாவாசை அன்று முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். அன்று நதி. ஆறு, கடல் கரைகளில் பித்ருக்களுக்கான தர்ப்பணத்தினை செய்யும் பொழுது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர். அவர்களை மோட்சம் அடையச் செய்யும் என கருட புராணம் கூறுகின்றது. முன்னோர்களின் ஆசீர்வாதம் அவரது சந்ததிகளை வெற்றிகரமான வாழ்வு பெறச் செய்யும்.
அன்று முழுவதும் சைவமாகவே இருப்பர். நிறைய மக்கள் ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களுக்கு சென்று பித்ரு வழிபாடு செய்வர். அன்று வழிபாடு முடியும் வரை உபவாசம் இருப்பர். பித்ரு வழிபாடு தரும் பலன்களாகக் கூறப்படுபவை
*உங்கள் தீய கர்மாக்களை நீக்க.
*வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும் பெற.
*வருங்கால சந்ததியினரின் வாழ்வுவளமாய் இருக்க.
*முன்னோர்களின் மோட்சத்திற்கு வழி வகுக்க.
இத்தனை சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை பித்ருக்கள் வழிபாட்டினை இந்துக்கள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
ஆடிப்பெருக்கு
ஆடி மாத்தின் 18-வது நாள் அன்று கொண்டாடப்படும் பண்டிகை. பஞ்ச பூதங்களில் நீருக்கு நன்றி சொல்லி வணங்கி வழிபடும் பண்டிகை. குடும்பத்தினர் சுற்றம் சூழ ஆற்றங்கரையில் வழிபடும் நாள். அன்று நதி நீரில் காதோலை, கருகமணி, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், வளையல் இவற்றினை ஆற்று நீரில் இட்டு மழை, நீர் வேண்டி வணங்குவர். அவரவர் குல தெய்வத் தினையும் வழிபடுவர். பல வகையிலான கலந்த சாதங்கள் செய்து உற்றார் உறவினருடன் கூடி உண்பர். திருமுல்லை வாயிலில் உள்ள பச்சை அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி, செவ்வாய் பூஜைகள் சிறப்பாக நடை பெறுவதோடு அருகில் இருக்கும் குளத்தில் 18ம் பெருக்கு பூஜையும் மிக சிறப்பாக நடைபெறும். இது போன்று தமிழகத்தின் பல அம்மன் கோவில்களிலும் ஆடி மாதம் முழுவதும் நடைபெறும்.
ஆடி பூரம்
ஆண்டாள் ஜெயந்தி எனப்படும் ஆடிபூஜை அன்னை ஆண்டாளின் பிறந்த நாளாகும். ஆண்டாள் லட்சுமியின் பிறப்பாவாள். வில்லிபுத்தூரில் 10 நாள் விழாவாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள் விழா முடிந்து பத்தாவது நாள் அன்று ஆண்டாள், ரங்கநாதர் திருமணம் சீரும் சிறப்புமாய் நடைபெறும். சிவன் கோயில்களில் அம்பாளுக்கு எண்ணற்ற வளையல்கள் அணிவித்து கொண்டாடுவர். இது தவிர நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி போன்ற விசேஷங்களும் உண்டு. பாம்பையும், கருடனையும் வழிபடுவது தொன்று தொட்டே இருந்து வருகின்றது.
மனித வாழ்வு என்பது போராட்டமானதுதான். நல்லவைகளை பெற வேண்டும். காக்க வேண்டும். தீயவைகளை வளர விடாது அழிக்க வேண்டும். இந்த மனதோடு போராடி நம்மை நல்வழிப்படுத்திக் கொள்ள நம் முயற்சியுடன் இறை சக்தியின் அருளும் தேவைப்படுகின்றது. அதனைத்தான் நம் முன்னோர்கள் வழிபாடுகள். பண்டிகைகள், விழாக்கள் மூலம் நமது கலாச்சாரத்தில் புகுத்தியுள்ளனர்.
குடந்தை நடேசன்...
Comments