கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினம்
ஜூலை 29,
கலைத் தந்தை என்று போற்றப்பட்டவரும், கல்வியாளருமான கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினம் இன்று(1974).
l சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். குடும்பம் இலங்கையில் துணி வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. கொழும்பு புனித தாமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையில் தமிழர்களுக்கு அடையாள சூடு போடும் வழக்கத்தை தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தவர். இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக ஒரு பத்திரிகை நடத்தினார்.
l இந்தியா திரும்பியவர், காங்கிரஸில் 1917-ல் சேர்ந்து தொழிலாளர் தலைவராகவும், மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்தார். மதுரையில் 1925-ல் மீனாட்சி மில் நிறுவனத்தைத் தொடங்கி, நூற்பாலை, நெசவு ஆலையையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.
l மீனாட்சி ஆலையின் ஆரம்பகால இயக்குநர்களாக தேசியத் தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி, நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வந்தபோது இவரது விருந்தினர்களாகத் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
l நலிந்த ஆலைகளை ஏற்று தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெற்றிகரமாக நடத்தியவர். இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தொழிலாளர்கள், இதர ஆலை முதலாளிகள் மத்தியில் பெருமதிப்பும் மரியாதையும் பெற்றவர். ஆலைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
l ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கி கல்விப் பணியாற்றினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழை பல ஆண்டுகள் நடத்தினார். இவர் கட்டிடக் கலைஞரும்கூட. இசை, ஓவியம், குதிரைச் சவாரியிலும் ஆர்வம் உள்ளவர். தினமும் திருவாசகம் ஓதும் வழக்கம் கொண்டவர்.
l மத்திய அரசின் கட்டாய இந்திக் கல்வி திட்டத்தை எதிர்த்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகினார். இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய சோமசுந்தர பாரதியார், பெரியார் போன்றோருக்கு உறுதுணையாக இருந்தார்.
l 14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81 வயதில் (1974) மறைந்தார்.
Comments