மதிய உறக்கத்தின் நியாயங்கள்

 மதிய உறக்கத்தின் நியாயங்கள்

*


*

உணவின் கவளங்கள்


ஒவ்வொன்றாய் வயிற்றில் இறங்கிக்கொண்டிருக்கும்

போதே 

நல்லரவத்தின் நச்சைப் போல்

மூளையிலிருந்து

துளித்துளியாக இறங்கத் தொடங்கிவிடுகிறது உறக்கம் 

கண்களின் இரைப்பைகளுக்கு.


அது பரவத்தொடங்கும்போது உடலும் மனமும்  

அணிந்து கொள்கின்றன

ஆயிரத்தொரு அரேபியக் கதைகளில் உலவும்

அடிமைகளின் சாயலை.


உத்தரவுக்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறொரு சிந்தையுண்டோ அடிமைகளுக்கு ?


பசிக்கு ஒரு இரைப்பைதான்

உறக்கத்திற்கோ இரண்டு.


நிரம்பித் தளும்பும் 

கவலைகள் மட்டுமல்ல

பொங்கி வழியும் களிப்பும் 

நாடி நரம்புகளை

இறுக்கி இளகி விளையாட 

உடலில் கூடுகட்டத் தொடங்குகிறது  

மதிய உறக்கம்.


அப்போது நம்மையறியாமல்

இமைகளில் படிகிறது

தூக்கத்தின் அபின்.


இரவின் நீளத்தை கண்ணீர்த்துளிகளாலும்

பெருமூச்சுகளாலும் அளந்து பார்த்தவர்கள் மட்டும் அறிவார்கள்

மதிய உறக்கத்தின் நியாயத்தை.


உறக்கம் தவிர்த்து

இன்னொரு போதையால் 

உடலின் களைப்பை தீர்த்து

இரண்டாம் மூன்றாம் ஜாமங்களில் 

மூத்திரப் பை நிரம்பி 

கழிவறைக்கு எழுப்புகையில்

தங்களைத் தாங்களே 

கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு 

படுக்கையை விட்டு  எழுபவர்கள் அறிவார்கள்

மதிய உறக்கத்தின் நியாயத்தை.


இரவெல்லாம் அழுது 

அரற்றிய குழந்தைக்கு 

ரே ரே பாடி 

உறக்கம் தொலைத்துப் 

பின்னும் காலையெழுந்து

சமைத்துக் களைக்கும்

இளம் மனைவியின் 

காதல் கணவன் அறிவான் 

மதிய உறக்கத்தின் நியாயத்தை.


நள்ளிரவின் சாலைகளில்

நாய்களின் ஊளையின் ஊடே

விசிலூதி அலையும் கூர்க்காவின்

கண்காணாத் தாயும்,


அனைவரும் தூங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாயிலில்

கொசுக்களும் குளிரும் வாட்ட

கொட்டக் கொட்ட வரும்  தூக்கத்தை விரட்ட

இமைகளை ஈரத்துணியால் துடைக்கும் வயது 

முதிர்ந்த காவலாளியின்

தலை நரைத்த துணைகளும்

அறிவார்கள் 

மதிய உறக்கத்தின் நியாயத்தை.


மருத்துவர்களாலும் 

தூக்க மாத்திரைகளாலும்

கைவிடப்பட்டவர்களின்

வலிக்கும் இமைகள் அறியும்

மதிய உறக்கத்தின் நியாயத்தை.


இவை ஒன்றையும் அறியாமல்

மதிய உறக்கத்தை சோம்பேறித்தனம் என்று திட்டுபவர்கள் 

தைரியம் இருந்தால்  திட்டட்டும்

களவாணிகளின் வீடுகளுக்குப் போய்  

ஒரு மதிய வேளையில்.

*பிருந்தா சாரதி


நன்றி: குமுதம் 29.06.2022 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி