அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ்

 அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ்



மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட 

வேண்டும்.. 

அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை’ விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்?


இன்னும் அவரது முத்திரைப் பாடல்களான நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பால் வண்ணம் பருவம் கண்டு, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, பார்த்தேன் சிரித்தேன், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்…..எதைத் தான் விட முடியும்?


கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் மூவர் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போனஸ் பரிசு.


இதெல்லாம் கடந்த காலத்தின் மனிதர்களுக்கானவை…இடையே திடீரென்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, எண்பதுகளின் பிற்பகுதியில் ஊமை விழிகள் படத்தில், மிகப் பரவலாகக் கொண்டாடப் பட்ட, தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற பாடலை

பி பி எஸ் வழங்கியது யாராலும்

மறக்க முடியாது. 


மிக மிக எளிய மனிதராகவே அறியப்பட்ட அவர், கிட்டத் தட்ட ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொண்டவர். எப்போதும் பல நிறங்களில் விதவிதமான பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பார் அவர். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடிக்கப்பட்டு அங்கே செம்மொழி பூங்கா வரவிருப்பதாக செய்தி வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தவர் அவர் தான்….கால காலமாக மாலை நேரங்களை அவர் அங்கே தான் கழித்து வந்தார். அவரைப் பார்க்க விரும்பும் யாரும் அந்த நேரத்தில் அவரை அங்கே பிடித்துவிட முடியும்


தம்மை விட இளைய வயது பாடகர்கள் அல்லது போட்டிகளில் தமது பாடலைப் பாடும் சிறுவர்கள் யாரையும் அத்தனை சிறந்த குரல் வளம் மிக்கவர்களாக வாழ்த்துவார். தலைக் கனத்தோடு அவர் யாரையும் மட்டம் தட்டிப் பேசியதாக ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை.


அவரது குரல் ஓர் அலங்காரம் என்றால், அவரது உடை அலங்காரம் இன்னும் தடபுடலாக இருக்கும்….சரிகைக் குல்லாய் சட்டை மீது ஓர் சால்வை, பவர் அதிகமான லென்ஸ் கொண்ட கண்ணாடி, நெற்றியில் திருநாமம்.


அவரது பாடல்களை அணு அணுவாய் நான் எப்படி ரசித்தேன் என்று  நினைக்கும்போது  இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது…..


வணக்கம் பி பி எஸ்…..எங்களை உங்களது வசீகர குரலின்வழி புதிய கனவுகளுக்கு கற்பனைகளுக்கு வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்திய கலைஞனே, நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் – தமிழில் மட்டும் அல்ல கன்னடம் தெலுங்கு என உங்கள் குரல் ஒலித்த அத்தனை மொழிகளிலும்….

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி