கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.
கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்த தினம் இன்று.
.கவிஞர்கள் மழையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் ''மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு '' என வெயிலைக் கொண்டாடியவர். அம்மாவுக்கான வரிகளை கேட்டு திளைத்துகொண்டிருந்த நேரத்தில் ''ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு'' என தந்தைக்கும் தாலாட்டு கொடுத்த பாடலாசிரியர். எளிய வார்த்தைகளால், உறவுகளுக்கு உயிர் கொடுத்து பாடலை கொண்டாடிய நா.முத்துக்குமாரின் 44-ஆவது பிறந்த நாள் இன்று.நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். மேலும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பாரேயானால் காவியக்கவிஞர் வாலியின் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.
இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.
தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர். யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.
Comments