அரு.ராமநாதன் (Aru.Ramanathan) பிறந்த தினம் இன்று.
எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் என்ற பன்முகத் திறன்கொண்ட அரு.ராமநாதன் (Aru.Ramanathan) பிறந்த தினம் இன்று.
* சிவகங்கை மாவட்டம், கண்டனூரில் பிறந்தார் (1924). சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வத்தில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். 18 வயதுகூட நிரம்பாத இளம் பருவத்தில் ‘சம்சார சாகரம்’ என்ற நூலைத் தயாரித்து தன் நண்பரின் திருமண நாளுக்காகப் பரிசளித்தார்.
1945-ல் டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாடகப் போட்டிக்காக ‘ராஜராஜ சோழன்’ என்ற நாடகத்தை எழுதினார். அதற்கு முதல் பரிசும் கிடைத்தது. 1955-ல் அரங்கேறிய அந்த நாடகம் 1000-க்கும் மேற்பட்ட தடவை மேடையேறியது.
* பின்னர், தமிழ் சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படமாகவும் ராஜராஜ சோழன் வெளிவந்தது. இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியவரும் இவர்தான்.
‘வீரபாண்டியன் மனைவி’ நாவல் இவரது பத்திரிகையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்தது. இவரது படைப்புகளிலேயே மிகவும் புகழை பெற்றுத் தந்த நாவல் இது. அடுத்து ‘வெற்றி வேல் வீரத்தேவன்’, ‘வானவில்‘ ஆகிய நாடகங்களையும் எழுதினார்.
* எழுத்துக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர். இலக்கியப் பணி ஒன்றை மட்டுமே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்துவந்த படைப்பாளி, அரு.ராமநாதன் 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 50-வது வயதில் மறைந்தார்.
Comments