*மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!*
*மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!*
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 தொடங்கியுள்ள இந்த இனிய வேளையில், இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர் என போற்றப்படும் மனுவேல் ஆரோன் குறித்து பார்ப்போம். சதுரங்க விளையாட்டில் அவரது அசாத்திய சாதனைகள் படைத்த அவர், மாடர்ன் டே சர்வதேச செஸ் விளையாட்டு நடைமுறைகளை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஜாம்பவான் எனவும் அறியப்படுகிறார்.
இன்று இந்தியாவில் செஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்த பல கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் லேட்டஸ்ட் சென்சேஷனாக இருப்பவர் பிரக்ஞானந்தா. ஆனால், இவர்கள் அனைவருக்கும் முன்னவராக இந்தியா சார்பில் சர்வதேச அளவில் சாதித்தவர்தான் மனுவேல் ஆரோன். சர்வதேச மாஸ்டர் (இன்டர்நேஷனல் மாஸ்டர்) என்ற பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.
20-ம் நூற்றாண்டில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான 64 கட்டங்களில் தனது ஆட்சியை நிறுவியவர் மனுவேல் ஆரோன். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் யூவே, ஹங்கேரி வீரர் லாஜோஸ் போர்டிஷ், ஜெர்மன் வீரர் வூல்ஃப்கேங் உல்மன் போன்ற பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இவர் விளையாடிய போட்டிகள் புகழ்பெற்றதாக அறியப்படுகிறது.
செஸ் விளையாட்டு அறிமுகம்: இன்றைய மியான்மரின் (அப்போது பர்மா) காலனி ஒன்றில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியர்களுக்கு மகனாக கடந்த 1935, டிசம்பர் 30 அன்று பிறந்தவர் ஆரோன். எட்டு வயதில் அவருக்கு செஸ் விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. இந்த விளையாட்டின் நுணுக்கங்களை தனது வீட்டில் உள்ள மூத்தவர்களிடம் இருந்து கற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது குடும்பம் தமிழகத்தில் குடியேறி உள்ளது. அவரது பள்ளிக்கல்வியை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பயின்றுள்ளார். அலகாபாத் கல்லூரியில் மேற்படிப்பு பயின்றுள்ளார். அங்குதான் முதன்முதலில் செஸ் டோர்னமென்டில் விளையாடி உள்ளார். ஆனால் இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக வெவ்வேறு தொடர்களில் பங்கேற்று அசத்தியுள்ளார்.
செஸ் விளையாட்டில் ஆதிக்கம்: 1950-களின் இடைப்பகுதியில் இருந்து 1970-களின் இறுதி வரையில் செஸ் விளையாட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். குறிப்பாக 1957 தொடங்கி 1982 வரையில் நடைபெற்ற தமிழ்நாடு செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதேபோல 1959 முதல் 1981 வரையில் நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதனால், தமிழகம் இந்த செஸ் விளையாட்டின் பவர் ஹவுஸாக உருவானது.
தேசிய அளவோடு நின்று விடாமல் சர்வதேச அளவிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தார் ஆரோன். குறிப்பாக மேக்ஸ் யூவே, லாஜோஸ் போர்டிஷ், வூல்ஃப்கேங் உல்மன், பாபி பிஷ்ஷர், போட்வைனிக் போன்ற சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் விளையாடி உள்ளார். இதில் மேக்ஸ் யூவேவை தவிர மற்ற அனைவரும் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக 1962 வாக்கில் அவர் அர்ஜுனா விருதை வென்றார். செஸ் விளையாட்டில் இந்த உயரிய விருதை பெற்ற முதல் நபர். இந்திய அணியை இரண்டு செஸ் ஒலிம்பியாடில் கேப்டனாக வழி நடத்தியுள்ளார். மொத்தம் மூன்று ஒலிம்பியாடில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
இந்திய பங்களிப்பு: செஸ் விளையாடியதோடு நின்று விடாமல் இந்தியாவில் சர்வதே செஸ் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட ஆட்டத்தை பிரபலப்படுத்தியவர். அதற்காக நிறைய முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதற்காக நிறைய செஸ் குழுக்களை சர்வதேச தரத்தில் அவர் அமைத்துள்ளார். அது தவிர தமிழ்நாடு செஸ் சங்கத்தின் செயலாளர், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவராகவும் இயங்கியுள்ளார். சதுரங்கம் குறித்த செய்திகளை வழங்கும் ‘செஸ் மேட்’ எனும் இதழை நிறுவியவர்.
செஸ் வீரர், பயிற்சியாளர் மற்றும் பத்திரிகையாளர் என மூன்று விதமான பரிமாணங்களை தான் சார்ந்த விளையாட்டில் இயங்கியவர். இந்திய செஸ் விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்த காரணமாக திகழ்ந்தவர். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இவருடைய மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது சிறப்பானது. இது சாத்தியமாகும் என நான் நினைக்கவில்லை. உலக அளவில் நடைபெறும் சூழல்கள் இது இந்தியாவில் நடக்க காரணமாக அமைந்துள்ளது” என செஸ் ஒலிம்பியாட் 2022 குறித்து தெரிவித்துள்ளார் 86 வயதான மனுவேல் ஆரோன். தன்னை துடிப்போடு இயங்க செய்வது சதுரங்கம் தான் என அவரே தெரிவித்துள்ளார்.
Comments