திரைக்கலைஞர் சூர்யாவுக்கு இன்று பிறந்த நாள்
திரை உலகில் சாதனைகளை குவித்து விருதுகளை அள்ளிவரும் திரைக்கலைஞர் சூர்யாவுக்கு இன்று பிறந்த நாள்
வெகுஜனச் சட்டகத்துக்குள் தரமான படங்கள் மாறுபட்ட கதாபாத்திரங்கள், சோதனை முயற்சியான கதைக்களங்கள் என ரசிகர்களின் சிந்தனையையும் தரமான ரசனையையும் மதிக்கும் வகையிலான படங்களைக் கொடுக்க தொடர்ந்து மெனக்கெடுபவர் சூர்யா. 'நந்தா', 'காக்க காக்க', 'பிதாமகன்', 'ஆயுத எழுத்து', 'கஜினி', 'வாரணம் ஆயிரம்', 'ஏழாம் அறிவு', '24' சூரரைப்போற்று, ஜெய்பீம் எனப் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உட்பட பல சமூகநல நோக்கம் கொண்ட திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பவரான சூர்யா 2006இல் அகரம் அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் இன்றுவரை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி பெற்று முன்னேறியிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளை இன்னும் பல சமூகநலத் திட்டங்களுக்கு தன் சிறகை விரித்திருக்கிறது. அதோடு கல்வி உள்ளிட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் துணிச்சலாகக் குரல்கொடுப்பவராகவும் இருக்கிறார் சூர்யா. நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக்கொள்கையை விமர்சித்தும் அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இந்து தமிழ் உள்ளிட்ட நாளிதழ்களில் சமூகப் பிரச்சினைகள் குறித்த நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளார். சமூக சிந்தனை மிக்க இந்த சிறந்த கலைஞருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிப்போம் !
:
:
Comments