அகிலன் பன்முகத் தன்மைகொண்டவர்
‘#எழுத்தாளர்அகிலன்பிறந்ததினம்_இன்று
நான் எழுதிய முதற் கதையும் சரி , இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே.கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே. ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம்,மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்.’ – அகிலன்
செல்வமும் செழிப்பும் மிக்க வகையில் தந்தையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார் அகிலன்.ஆனால் தனது இளம்வயதிலேயே தந்தையை இழக்க நேரிட்டது,இளமையில் வறுமை என்ற கொடுமைக்குத் தள்ளப்பட்டார்; இருப்பினும் தாயின் கடும் உழைப்பால் தமது பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார் அகிலன்.
தனது மாணவப்பருவத்தில் – 1938 முதலே அகிலன் எழுதத் துவங்கினார்.பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய ‘அவன் ஏழை’ எனும் அவரது முதல் சிறுகதை அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது.
அகிலன், பள்ளிப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார், அவரைச் சுற்றி நிகழ்ந்த தேசியப் போராட்டங்களும், காந்திஜியின் கரூர் வருகையும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் சர்தார் வல்லபாய் படேலைச் சந்தித்ததும், அகிலனின் சுதந்திரப் போராட்ட வேட்கையைத் தூண்டின .
நாட்டு விடுதலை ஆர்வத்தில் தமது மேற்கல்வியை உதறி விட்டு 1940 இல் வெளிவந்த இவர், தமிழகத்தின் சிறுபத்திரிக்கைகள் முதல் பிரபல இதழ்கள் வரை சிறுகதைகளை எழுதத் துவங்கினார்.
அகிலனின் பல சிறுகதைகள் இந்தியாவின் பிற மாநில மொழிகளிலும் , ஆங்கிலம்,ஜெர்மன்,போலிஷ்,செக்,ரஷ்யன்,பல்கேரியன் ,பிரெஞ்சு போன்ற பிற நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ அதே உணர்வை, படிக்கும் போது வாசகரும் பெறுவதே அந்தப் படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி அகிலன்.
அதானால் தான் பாமரர் முதல் பயின்றோர் வரை அவரது எழுத்தைத் தொடர்ந்து வாசித்து,நேசித்து வருகின்றனர் .
200 சிறுகதைகளை எழுயுள்ளார் அகிலன். அவை அனைத்தும் ஒன்றாக சமீபத்தில் ‘அகிலன் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் கால வரிசைப்படி இரு தொகுதிகளாக அகிலன் கண்ணனால் தொகுக்கப்பட்டுள்ளது .
அகிலனின் சிறுகதைகள் அடிமை இந்தியா முதல் இன்று வரை உள்ள 50 ஆண்டு கால தமிழக வரலாற்றின் மனசாட்சியாகவே படைக்கப்பட்டுள்ளன.
புதுத் தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்கு அகிலனின் படைப்புகளுக்கு உண்டு.
இவரது சிறுகதைகள், தனி மனித உணர்வுகள் மூலம் சமூகப் பிரச்சினைகளை அச்சமின்றி தோலுரித்துக் காட்டுகின்றன.
வீடும் நாடும் ஒன்றை ஒன்று எப்படிப் பாதிக்கின்றன என்பதைத் துல்லியமாகப் பேசும் சிறுகதைகள்- அகிலனது சிறுகதைகள்.
குடும்பம்,உறவு,மனிதம்,காதல்,பாசம்,காமம்,வெறுப்பு,கடமை ,பொறுப்பு,உழைப்பு,சாதி,ஏழ்மை,அரசியல்,பெண்ணியம்,ஊழல்,நேர்மை,பண்பு,பொருளாதாரம் என அனைத்து விஷயங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன அகிலனின் சிறுகதைகள்.
பொதுவாக இலக்கியவாதிகள் ஒரு குறிப்பிட்ட வகைப் படைப்புகளிலேயே மிளிருவார்கள்.ஆனால் அகிலன் பன்முகத் தன்மைகொண்டவர் என்பதை அவரது நாவல்கள் மூலம் அறியலாம்.
அகிலனின் நாவல்களை, சரித்திர நாவல்கள் , சமூக நாவல்கள் எனப் பிரித்தாலும், அவரது சரித்திர நாவல்களிலும் தற்கால சமூகக் கருத்துக்கள் பிரதிபலிப்பதை வாசகர்களால் உணர முடியும்.
இதுவே அவரது நாவல்களின் வெற்றியும் கூட.
இன்றும் பெரும் வாசகர் கூட்டத்தைக் கவரும் அகிலனின், ‘ வேங்கையின் மைந்தன் ‘ , ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட சரித்திர நாவல் 21 பதிப்புகளைக் கண்டுள்ளது.
இதன் கதை மாந்தர்களான மாமன்னர் ராஜேந்திரர், வந்தியத்தேவர்,அருள்மொழி,இளங்கோ,ரோகிணி ,வீரமல்லன், உயிர் ஓவியமாய் படிப்பவரை வியாபிக்கின்றனர் . சரித்திர நிகழ்வுகளோடு, தமிழர்களின் தற்கால அரசியல் பிரச்சினைகளையும் இந்நாவலில் அகிலன் பிரதிபலிக்கத் தவறவில்லை.
தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல்லான வேங்கையின் மைந்தன் 1963 இல் மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
பாண்டிய சாம்ராஜ்யத்தைக் கதைக் களமாகக் கொண்ட அகிலனின் ‘கயல்விழி’ எனும் சரித்திரப் புதினம், 1964 -65 தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த தமிழ் நாவல் பரிசைப் பெற்றது. “வீட்டுக்கு வீடு தலைவர்கள் வேண்டும். நாட்டின் ஒவ்வொரு சிறிய , பெரிய துறைகளிலும் தலைவர்கள் வேண்டும்,அரசு,குடும்பம்,தொழில்,கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறைத் தலைவர்கள் தோன்றமாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன் நான்… அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்கக் கூடும் ‘ எனும் அகிலனின் கயல்விழி.
1975 இல் தமிழுக்கு முதல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்த அவரது ‘ சித்திரப்பாவை’, பெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு.
காமராஜர், சி.எஸ், ஜீவா, மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர்,எம்.ஜி.ஆர்,இந்திரா காந்தி ,கே.முத்தையா போன்ற தலைவர்களுடனான அகிலனின் நட்பும் இங்கு குறிப்பிடப் படவேண்டியது அவசியம்.அகிலனின் கடுமையான அரசியல் விமர்சனங்களைப் பெரும்பாலான தலைவர்கள் பொறுப்போடும், ஆரோக்கியமான மனப்பக்குவத்தோடும் ஏற்றுக்கொண்டனர்
எளிமை,உண்மை,மனித நேசம், கலைத்தன்மை,நேர்மை,அஞ்சாமை ,என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி – தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த படைப்பாளி அகிலன்.
_க_அபிராமிஅவர்களின்கட்டுரை
பகிர்வு
Comments