ஸ்ரீதர் எடுத்த ரிஸ்க்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’

 ஸ்ரீதருக்கு ரிஸ்க் எடுக்கறதுன்னா பிடிக்கும். அப்படி அவர் எடுத்த ரிஸ்க்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. அந்தப் படத்தில்தான் என் பெயர் கோபுவாக மாறிச்சு.


எனக்கு அது ரெண்டாவது படம். மேலும் நான் எழுதினது கூட ஒருசில காமெடி போர்ஷன்ஸ்தான். இருந்தாலும் எங்கயும் ஸ்ரீதர் அந்த அங்கீகாரத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எம்ஜிஆர்... இவங்க மூணு பேரும் மிகப்பெரும் ஜாம்பவான்கள். இதில் ஜெமினி கணேசன் டாப். அவருடைய சம்பளமும் கூட ஜாஸ்தி. பின்னர்தான் சிவாஜி, எம்ஜிஆர் ரெண்டு பேரும் உயர்ந்தாங்க.
இவங்க படங்களுக்கு மத்தில சவாலா எடுத்துக்கிட்டு முழுமையா புது நடிகர்களை வெச்சு எடுத்த படம்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. படம் முழுக்க ஒரு ஹாஸ்பிட்டலில் நடக்கும். அந்த நேரத்துல கொஞ்சம் சர்ச்சையான கதைக்களமும் கூட. திருமணமான பெண்... அவளின் முன்னாள் காதலன். இந்த சப்ஜெக்ட் எல்லாம் பேசவே அப்ப யோசிக்கணும்.
படம் முடிஞ்சது. படத்தை வாங்க யாருமே முன்வரலை. ஹீரோ ஹீரோயின் எல்லாருமே புதுமுகம். எப்படி விலை போகும்? ‘நாமளே ரிலீஸ் செய்யலாம்’னு முடிவு செய்தோம். சொன்னா நம்பமாட்டீங்க... படத்துக்கு அப்படி ஒரு வரவேற்பு! குடியரசு தின சிறப்பா வெளியாகி ‘சொன்னது நீதானா...’,‘ எங்கிருந்தாலும் வாழ்க...’ பாடல்கள் எல்லாம் சேர்ந்து படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது... ஸ்ரீதருக்கு பிரசிடென்ட் அவார்டு கிடைச்சது.
பலரும் எனக்கு கொடுத்த முதல் அட்வைஸ்... சென்டிமென்ட் கதை வசனம் பக்கம் மட்டும் போயிடாதே என்பதுதான். ‘காமெடி உனக்கு நல்லா வருது... காமெடி எழுத இங்க ஆட்களும் குறைவு... அதை மட்டும் விட்டுடாதே’னு சொன்னாங்க.அதை சின்சியரா கடைப்பிடிச்சு ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ வரை திரைக்கதை, வசனம் எழுதினேன். ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ மிகப்பெரிய வெற்றியடைஞ்சு விருதுகள் எல்லாம் அள்ளிச்சு.
என் மனைவி கமலா. அவங்களுக்கும் சென்னைதான். திருவல்லிக்கேணில வீடு. நல்லா படிச்சவங்க. அவங்களும் ஓர் எழுத்தாளர்தான். ‘கமலா சடகோபன்’ என்கிற பெயர்ல நிறைய கதைகள் எழுதியிருக்காங்க. அவங்க எழுதின ‘கதவு’ நாவல் தமிழின் முக்கியமான நாவல்கள்ல ஒண்ணா இப்பவும் கொண்டாடப்படுது. அவங்க நாவல்கள் தவிர நாடகங்களும் எழுதி இருக்காங்க.
எங்களுக்கு மொத்தம் நாலு பசங்க. மூத்தவர் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனில வேலை பார்த்து இப்ப ரிட்டையர்டு ஆகிட்டார். என் இரண்டாவது பையன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்ல மானேஜிங் எடிட்டரா இருக்கார். இவரும் இப்ப ‘காலச்சக்கரம் நரசிம்மா’ என்கிற பெயர்ல நாவல்கள் எழுதிட்டு இருக்கார்.
‘முதல்ல படிப்பு... அப்புறம் நல்ல வேலை... அதுக்குப் பிறகு உங்க ஆசை எதுவோ அதைச் செய்யுங்க...’ இதுதான் என் பசங்களுக்கு நான் சொன்ன ஒரே அட்வைஸ். என் மூணாவது பையன்ஸ்ரீ ராம், ஒய்.ஜி.மகேந்திரன் நாடகங்களுக்கு எழுதறார். சுரேஷ் கிருஷ்ணா தயாரிச்ச சீரியல்களுக்கு டயலாக் எழுதியிருக்கார். நாலாவது பையன் தர், ஐடி பக்கம் போயிட்டார்.
எல்லா பசங்களும் திருமணமாகி சந்தோஷமா இருக்காங்க. பேரன், பேத்தி எல்லாம் தலையெடுத்துட்டாங்க. ஒரு பேரன் கவுதம் வாசுதேவ் மேனன்கிட்டயும், ஒரு பேத்தி ராதாமோகன்கிட்டயும் அசிஸ்டெண்ட்டா இருக்காங்க. இன்னொரு பேரன் பிரபல சேனல்ல நல்ல போஸ்ட்டிங்குல இருக்கார். நானும் சரி... என் குடும்பமும் சரி... பணம்தான் பிரதானம்னு நினைச்சதே இல்லை. எந்த வேலையா இருந்தாலும் நேர்மையா உழைக்கணும்... இதை மட்டுமே குறிக்கோளா வைச்சு வாழ்ந்தோம்; வாழ்றோம்.
சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னு சினிமாவுக்கு வராம, நின்னு நிதானமா ஆடணும்கிற எண்ணத்தோட உழைப்பையும் திறமையையும் கொடுத்தா கண்டிப்பா அதுக்கு பலன் கிடைக்கும்!
-சித்ராலாயா கோபு
நன்றி: குங்குமம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி