#குறிஞ்சிவேலன் 81 பிறந்த நாள்
#குறிஞ்சிவேலன் 81 பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐
*
மலையாளத்திலிருந்து எண்ணற்ற புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும், நேர்காணல்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்து வருபவரும்,
'திசை எட்டும்' மொழிபெயர்ப்புக் காலாண்டு இதழை பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருபவரும்,
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றவருமான
மொழிபெயர்ப்பாளர் #குறிஞ்சிவேலன் Arumugam Selvaraju அவர்கள் 80 வயது நிறைவு செய்து 81இல் அடி எடுத்து வைக்கிறார். தன் நீண்ட பயணத்தில் மொழிபெயர்ப்பு மூலமாகத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பெரும் வளம் சேர்த்தவர் குறிஞ்சி வேலன் அவர்கள்.
மொழிபெயர்ப்பு என்பது எவ்வளவு பெரிய சவாலான காரியம் , செயல்பாடு என்பது குறித்த மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்களின் கவிதை ஒன்றை நினைவு இங்கே கூர்கிறேன்.
"கவிதையை மொழிபெயர்ப்பது
கூடு விட்டுக் கூடு பாய்வது.
மீன் தண்ணீரில் நீந்துவது போல் மொழிபெயர்ப்பாளன் மனங்களுக்குள் நீந்துகிறான்.
ஒவ்வொரு சொல்லின் கரையோரத்துப் பொடி மண்ணிலும் குனிந்திருக்கிறான் .
ஒவ்வொரு பாசியின் நிறத்தையும் ஆராய்கிறான்.
ஒவ்வொரு சங்கையும் ஊதிப் பார்க்கிறான்.
கவிதை மொழிபெயர்ப்பு விக்கிரமாதித்தன் கதையில்
தலையை மாற்றி வைக்கும் திகைப்பாகும்.
மொழிபெயர்ப்பாளன்
தன் உடலில்
இன்னொரு கவிஞனின் தலையைப்
பொருத்திப் நிறுத்துகிறான்."
( மொழிபெயர்ப்பு: கவிஞர் சிற்பி )
இது கவிதைகளை மொழிபெயர்ப்பது குறித்த கவிதை என்றாலும் பொதுவாக மொழிபெயர்ப்பு என்பதே ஒரு சாகசமும் சவாலும் நிறைந்த பணிதான். மூல எழுத்தாளனின் மனதுக்குள் பயணிக்கும் சாகசத்தை மொழிபெயர்ப்பாளன் செய்கிறான். அப்படிப் பயணிக்கிறபோது மூல ஆசிரியனின் ஆன்மாவுக்குள் மொழிபெயர்ப்பாளனும் கூடுவிட்டுக் கூடுபாயும் பேரனுபவம் நிகழும்.
குறிஞ்சி வேலன் அவர்களுக்கு இப்படி எத்தனை எத்தனையோ அனுபவங்கள் கிடைத்திருக்க கூடும்.
அப்படிப் பார்க்கிறபோது அவர் பல மனிதர்களின், கதாபாத்திரங்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர் என்று புரிந்து கொள்கிறேன் .
அவர் 'திசையட்டும்' பயணம் செய்து பல்வேறு மனிதர்களை, பண்பாடுகளை, வரலாறுகளை, அறிவியலை, உளவியலை, பேருண்மைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து தரும் பணியினைத் தொடர்ந்து செய்து சீரிளமைத் திறத்தோடு வாழ்ந்திட என் அன்பான வாழ்த்துக்களை வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.❤️💐
பிருந்தா சாரதி
*
Comments