தமிழ் நடிகைகளில் சொந்தமாக முதன் முதலில் தியேட்டர் கட்டியவர்
சென்னை டி நகரில் தன் பெயரில் ஒரு தியேட்டர் கட்டினார் ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாக முதன் முதலில் தியேட்டர் கட்டியவர் இவர்தான். இதை வாசன் திறந்து வைத்தார்.
தம்பி ராமன்னாவுடன் சேர்ந்து ஆர் ஆர் பிக்சர்ஸ் என்ற படக் கம்பனியை தொடங்கினார். முதல் படம் வாழப் பிறந்தவள். இதில் அவரே நடித்தார். படம் சுமாராக ஓடியது. 54இல் எம் ஜி ஆர்- சிவாஜி இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தை தயாரித்தார். இதில் தனக்கு பொருத்தமான வேடம் இல்லாததால் பி எஸ் சரோஜா, குசல குமாரி இருவரையும் நடிக்க வைத்தார். இரு மாபெரும் நடிகர்கள் நடித்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இதனால் அவர் துவண்டுவிடவில்லை. குலேபகாவலி என்ற மசாலா படத்தை எடுத்தார். எம் ஜி ஆரை கதானாயனாக்கி அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று பெரிய வசூலைக் கொடுத்தது.
பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம் ஜி ஆர் என்ற நான்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ராஜகுமாரி தங்கப் பதுமை என்ற படத்தில் சிவாஜியுடன் நடித்து 5 சூப்பர் ஸ்டார் களுடன் நடித்த முதல் நடிகை என்ற பெருமை பெற்றார். பின்னர் இந்தப் பெருமையை பானுமதி பெற்றார்.
63இல் வானம்பாடி என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார், அதுவே அவரது கடைசிப் படம். அதன் பின் படங்களில் அவர் நடிக்கவில்லை.டி நகர் வீட்டில் அமைதியாக வாழ்ந்தார். பிறகு தன் தியேட்டரை விற்றுவிட்டார். இப்போது அது ஒரு வணிக வளாகமாக இருக்கிறது.
திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராஜகுமாரி 20-9-1999 இல் தனது 77 வது வயதில் காலமானார்.தமிழக திரை உலகின் கனவுக் கன்னி மறைந்தாலும் மக்களின் மனதில் இன்னும் கனவுக் கன்னியாகவே வாழ்கிறார்.
நன்றி: ஆனந்தி ரிப்போர்ட்டர்
Comments