தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை”


 “திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்தவி.சி. கணேசன் (இன்னும் சிவாஜி கணேசன் ஆகவில்லை), இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார். எனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார்.

இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?” என்றார்.
“நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்” என்றார், அண்ணா.
மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா! வசனத்தைப் படித்தாயா?” என்று கேட்டார்.
சிவாஜி அவரிடம், “அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.
அண்ணா சிவாஜியை கட்டித் தழுவி “கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.
திராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.
“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?” என்று கேட்டார்.
சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!” என்று பெரியார் வாழ்த்தினார்.
பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.
“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்! ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப் பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜி கணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்ட பிச்சை” என்று சிவாஜி கணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

thanks
kandasamy.r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி