நரகத்தில் சில தேவதைகள்'

 'நரகத்தில் சில தேவதைகள்' 

*


உலக செவிலியர் தின (மே12) வாழ்த்துகள். 

*

இந்த கொரோனா காலகட்டத்தில் செவிலியர்களின் சேவை மிகப் பெரியது. 


தொற்று அபாயத்தைத் தாண்டிப் போரில் பணி புரிவதைப் போல் உலகம் முழுவதும் பணிபுரிகிறார்கள் செவிலியர்கள். பலர் உயிர் நீத்தும் இருக்கிறார்கள். 

அந்த வெள்ளுடைத் தேவதைகளுக்கு என் வணக்கமும் வாழ்த்துகளும். 


மருத்துவமனையின் வலியும் வேதனையும், நோய்மையும் அழுகையும், நிண நாற்றமும் , பிண யதார்த்தமும், 

மருந்து வாடையும் மன அழுத்தமும்

மிகுந்த சூழலில் புன்னகையோடு பணிபுரியும் செவிலியர்களை


'நரகத்தில் சில தேவதைகள்' 


என்று எழுதினார் கவிஞர்  நா. காமராசன். 


இன்று அந்த வரி மிகப் பொருத்தமாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் தோன்றுகிறது. 


கொரோனா தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாட்களில் இதை நான் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன். 


பகலிரவு பாராமல் ஓய்வின்றிப் பணியாற்றும் உங்கள் உழைப்புக்கும் தியாகத்திற்கும் நாங்கள் கொடுக்கும் சம்பளம் எந்த வகையிலும் ஈடாகாது. 


வெள்ளுடைத் தேவதைகளே!


போரில் காயம்பட்ட வீரர்களுக்குக் கைவிளக்கேந்தி மருத்துவம் பார்த்த ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் மறு உருவங்களாகவே உங்களை நினைக்கத் தோன்றுகிறது.


கைவிளக்கேந்திய காரிகைகளே....

உங்கள் கைவிளக்கில் மினுமினுக்கும் சிறு சுடரின்  ஒளியில்தான் இன்று அன்பு உயிர்வாழ்கிறது. 


எங்கள் நெஞ்சின் சுடரை உங்களுக்குத்

தருகிறோம். எங்கள் அன்பும் நன்றியும் கலந்த கண்ணீர்த்துளிகளையும் உங்கள் உள்ளங்கைகளில் வைக்கிறோம்.


தேவதைகளின் தேவை அதிகமாயிருக்கும்  காலம் இது. 


களப்பணியில் முன்வரிசையில் நின்று பணியாற்றி எங்கள் கண்முன் தோன்றும் கதாநாயகர்கள் நீங்கள்.


அன்பின் தூதுவர்கள் நீங்கள்...


அன்னையைப் போல் அரவணைக்கும் 

உங்கள் கரங்களில் இன்று இந்த உலகம் ஒரு கைக்குழந்தை.


உங்கள் பணியைக் காலம் போற்றும். நன்றியுள்ள மனிதம் நாள்தோறும் போற்றி வணங்கும்.


நீங்கள் நலமாக வாழ்க...

இந்த நிலம் நலமாக வாழ.

***

பிருந்தா சாரதி


Brindha Sarathy 

*

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி