அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்

 


பத்து வருடங்களுக்கு முன்பாக, நானும் இயக்குனர் லீனா மணிமேகலையும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்குச் சென்றோம். அங்கே எங்களது 'செங்கடல்' திரையிடப்படயிருந்தது. இரவு, சென்னையில் இரயிலில் ஏறி இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் அமர்ந்துகொண்டோம். எங்களுக்கு எதிரேயிருந்த இருக்கையில் நடுத்தர வயதான ஒரு மனிதர் புன்னகை மாறாத முகத்துடன் அமர்ந்திருந்தார்.

அந்த மனிதர் நல்ல உயரம். சற்றே சிவந்த நிறம். தடித்த மீசை. அவரது குரல் மிக மென்மையாகயிருந்தது. அந்தப் பெட்டியிலிருந்த எல்லாப் பயணிகளுக்கும் அவர் ஏதாவது ஆலோசனைகளும் குறிப்புகளும் சொல்லிக்கொண்டேயிருந்தார். பேசுவதில் நிரம்ப ஆர்வமுள்ளவராகத் தெரிந்தார். நான் கோலா போத்தலில் கொஞ்சம் விஸ்கி கலந்து எடுத்துப் போயிருந்தேன். அதை எப்போது அருந்தலாம், எப்படி இரயிலுக்குள் புகைபிடிக்கலாம் என்பதிலேயே என் முழுக் கவனமுமிருந்தது. ஆனால், அந்த மனிதர் என்னை அங்கே இங்கே நகரவிடாமல் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தார். நான் ஈழத் தமிழன் எனத் தெரிய வந்ததும், இலங்கை அரசியல் குறித்து என்னிடம் ஆர்வத்துடன் பேசினார். அவர் வெளிநாடுகளுக்கு வியாபார விஷயமாக அடிக்கடி போய் வருவராம். அங்கெல்லாம் நிறைய ஈழத் தமிழர்களைச் சந்தித்துள்ளாராம்.
லீனா யாருடனோ அலைபேசியில் மும்முரமாக சினிமா குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார். லீனா பேசுவதையும் கவனித்த அந்த மனிதர் “மேடம் சினிமாவில் இருக்கிறார்களா... சினிமா குறித்துப் பேசுகிறாரே?“ என்று கேட்டார். லீனாவுக்கு எங்களது உரையாடலில் கலந்துகொள்ள நேரமில்லை. அவர் அலைபேசியிலேயே காதை வைத்திருந்தார். எனவே பதில் சொல்வது எனது பொறுப்பாகியது. இந்த மனிதருக்கு சுயாதீன சினிமா, ஆவணப் படம் என்றெல்லாம் சொல்லி, என்னத்தைப் புரிந்துகொள்கிறார் என நினைத்துக்கொண்டு “அவர் முன்பு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்“ எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டேன். ஆனால், அந்த மனிதரோ அந்தப் பேச்சை இலேசில் விடுவதாக இல்லை. லீனா அலைபேசியில் பேசி முடிக்கக் காத்திருந்து “ஏன் பாரதிராஜாவிடமிருந்து விலகி விட்டீர்கள்?“ எனக் கேட்டார். லீனா சிறுபுன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தார். அந்த மனிதர் விடுவதாகயில்லை. “சச்சா என ஒருவர் பாரதிராஜாவிடம் இருப்பாரே தெரியுமா?“ எனக் கேட்டார். “ராஜா சந்திரசேகரைச் சொல்கிறார்“ என லீனா எனக்கு விளக்கினார். நான் நடுவே இரண்டு தடவைகள் எழுந்து சென்று தாகசாந்தி செய்து வந்தேன். ஒருமாதிரியாகத் தூங்க ஆயத்தமானோம்.
எனக்கும் அந்த மனிதருக்கும் மேற்தட்டுப் படுக்கைகள். அவ்வகைப் படுக்கைகளில் முன்பின் ஏறி எனக்குப் பழக்கமில்லை. தட்டுத்தடுமாறித்தான் ஏறினேன். படுத்திருந்தவாறே அவர் பேச்சைத் தொடர்ந்தார். “என்ன வியாபாரம் செய்கிறீர்கள்?“ எனக் கேட்டேன். தன்னுடைய தாத்தா உருவாக்கிய கல்வி நிலையங்களை தானே பார்த்துக்கொள்வதாகச் சொன்னார். “தாத்தாவின் பெயர் என்ன?“ எனக் கேட்டேன். “ராம்சந்தர் “ என்றார். அப்படியொரு 'கல்வித் தந்தை'யை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.
ஒருமுறை படுக்கையிலிருந்து எழுந்துபோய், கழிவறையில் நின்று புகைத்துவிட்டு வந்தேன். மீண்டும் படுக்கையில் ஏறும்போது கால் சறுக்கி விழுந்துவிட்டேன். அந்த மனிதர் பதறிப் போனார். அவர் உதவிக்கு வரமுன்பே, சமாளித்துக்கொண்டு படுக்கையில் ஏறிவிட்டேன். எவ்வாறு ஏணியில் கால் வைத்துக் கவனமாக மேற்தட்டுக்கு ஏறுவது என அந்த மனிதர் பொறுமையாக விளக்கினார். பின்பு துாங்கிவிட்டோம்.
அதிகாலையில் அந்த மனிதர் என்னைத் தட்டி எழுப்பினார். இரயில் அப்போது எர்ணாகுளம் நிலையத்தில் தரிந்து நின்றிருந்தது. கையில் பெட்டியுடன் இறங்குவதற்குத் தயாராக நின்ற அந்த மனிதர் “போய் வருகிறேன்...முதல் மரியாதை படம் பாருங்கள்“ எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தார். 'எதற்காக இவர் முதல் மரியாதையைப் பார்க்கச் சொல்கிறார்...“ என நான் யோசிக்க ஆரம்பிக்கும்போதே என் மண்டைக்குள் 'அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக' பாடல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இசைஞானியின் புல்லாங்குழல் நெஞ்சைப் பிசைந்தது. “தீபன்“ என்று கத்தினேன். அவர் இரயிலிலிருந்து இறங்கிப் போய்விட்டார். தன்னுடைய தாத்தாவுடைய பெயர் ராம்சந்தர் என்று அவர் சொன்னது ஞாபகம் வந்து. எம்.ஜி. ராம்சந்தர் எனச் சொல்லியிருந்தால், இந்த மனிதரை அப்போதே அடையாளம் கண்டிருப்பேன்.
அந்தப் பயணத்தைக் குறித்து நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அந்த மனிதர் 'முதல் மரியாதை' என்றே ஒரே படத்திலேயே தமிழ் நிலம் முழுவதும் அறியப்பட்டவர். அவர் நடித்த பாடலை நான் ஆயிரம் தடவைகளுக்குக் குறையாமல் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் மறைந்தபோது அவரது உடலை எடுத்துச் சென்ற வண்டியில் ஏறமுயன்ற ஜெயலலிதாவைக் கீழே தள்ளிவிட்டவர் இவர். தன்னை மறைத்துக்கொண்டு எதற்காக ஓர் இரவு முழுவதும் என்னோடு பேசிக்கொண்டிருக்க வேண்டும். மறைத்திருந்த அடையாளத்தை எதற்காகக் காலையில் வெளிப்படுத்திவிட்டு மறைந்து போகவேண்டும்?
இன்றுதான் அவரது நேர்காணலொன்றை முதற்தடவையாக you tube-ல் பார்த்தேன். இப்போது ஏதோ புதுப் படத்தில் நடித்திருக்கிறாராம். மீண்டும் திரையில் தோன்றும் கனவை முப்பது வருடங்களாகத் தனக்குள் அடைகாத்துக்கொண்டே இருந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அந்தக் கனவின் ஒரு துளிதான் அன்றைய பயணத்தில் என்மீது சிந்தியிருக்கிறது.
- ஷோபா சக்தியின் சென்ற ஆண்டு மார்ச் முகநூல் பதிவு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி