- தோப்பில் முகமது மீரான்
கே: உங்க நாவல்கள் பெரும்பாலும் தேங்காய் பட்டனத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?
மீ: அங்க, எங்களைப் பெரும்பாலும் திருமணத்துக்குக் கூப்பிடமாட்டாங்க. நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்.
கே: ஒரு புத்தகத்தின் சமர்ப்பணத்தில் ‘என்னை மகனாக வளர்த்த இன்னொரு அம்மாவுக்கு’ன்னு சொல்லி இருக்கீங்க.
மீ: அந்த அம்மாதான் என்னை வளர்த்தது. அப்பாவோட முதல் மனைவி. எங்க அப்பா முதல்ல ஒரு கல்யாணம் பண்ணிச்சு, குழந்தைகள் இல்லை. பிறகு ரெண்டாவது திருமணம். அதுதான் என் அம்மா. அதில் 13 குழந்தைகள். 9 பேர் இருக்கோம். நாலு பேர் இறந்திட்டாங்க. அந்த அம்மாவை பற்றிய விவரம் நான் ‘உம்மா’ என்ற ஒரு சிறு கதையில சொல்லியிருக்கேன். கிட்டத்தட்ட 12 வயது வரைக்கும் அவங்கதான் என் அம்மான்னு நினைச்சுட்டு இருந்தேன்.
கே: உங்கள் அப்பா, அம்மா சொன்ன கதைகள் உங்கள் எழுத்தை, பாதிதித்திருக்கிறதா?
மீ: கடலோரக் கிராமத்தின் கதைகளை முழுசா சொல்லித்தந்தது என் அப்பா. அவர் சொல்லும் போதே ஒரு படம் மனசுல கிடைக்கும். ஒரு அப்பாவும் பிள்ளைக்கும் உள்ள உறவைவிட அவரு ஒரு கதை சொல்பவராகவும் நாங்க அதை கேட்பவருமாகவும் இருந்து தினமும் கதை கேட்போம். கடலோரக் கிராமங்களை பத்தி, அப்பு சொன்னது, அவங்க குதிரைல போனது எல்லாம் என் மனசுல பதிஞ்சது. படத்தைப் பார்த்து வரைஞ்ச மாதிரி ‘கடலோரக் கிராமத்தின் கதை’ எழுதினேன். அப்பா சொன்ன கதையை அப்படியே உருவாக்கினதாலதான் அது வெற்றிகரமாய் அமைந்தது.
- தோப்பில் முகமது மீரான்
நேர்காணல்: சங்கர் ராம சுப்பிரமணியன், தளவாய் சுந்தரம்
நன்றி: அழியாச்சுடர்
Comments