வசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா -
வசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா -
நம்மில் சிலர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்த்திருக்கலாம். பேரரசர் ஷாஜஹான் தன் அழகு மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது அந்தக் காதல் மாளிகை. அதே போன்று ஒரு காதல் சின்னத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கட்டினார்கள். இதைக் கட்டியவர்கள், கே.எஸ்.பிரகாஷ் ராவ் மற்றும் ராம நாயுடு. சிமெண்ட்டோ செங்கல்லோ இல்லாமல் வெள்ளித்திரையில் (செல்லுலாய்டில்) இவர்கள் கட்டிய அந்தக் காதல் மாளிகையின் மகாராஜா சிவாஜி கணேசன், மகாராணி வாணிஸ்ரீ. தயாரிப்பாளர் ராம நாயுடு தெலுங்கில் தயாரித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேம் நகர்’ படத்தின் ரீ-மேக்கான வசந்தமாளிகைதான் அந்தக் காதல் சின்னம்.
இப்படத்தில் ஆனந்த் கேரக்டரில் வரும் சிவாஜி பணக்கார வீட்டுப்பிள்ளை. குடி, கும்மாளம் எனச் செல்வச் செழிப்புடைய சீமானின் சகல குணங்களையும் உடையவர். கதாநாயகியான வாணிஸ்ரீ ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருப்பவர். சிவாஜியிடம் வேலை கேட்டு வருவார். எதிர்பாராத விதமாக சிவாஜி தூக்கி வீசும் மதுக்கோப்பை உடைந்து, ஒரு கண்ணாடித் துண்டு வாணிஸ்ரீயைக் காயப்படுத்தி விடும். இதைப் பார்க்கும் சிவாஜி பதறிப்போய் “இனி குடிக்க மாட்டேன்” என சத்தியம் செய்வார்.
பின்னர், இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த பின் புதியதொரு மாளிகையை எழுப்பி, அங்கே வாணிஸ்ரீயை அழைத்துச் சென்று, “லதா! நான் உனக்காகக் கட்டிய வசந்தமாளிகையைப் பார்!” என்று தொடங்கி சிவாஜி பேசும் வசனங்கள் இது வரை தமிழ் சினிமாவில் வந்த காதல் வசனங்களிலேயே மிகச் சிறந்தவையாக இன்றும் பாராட்டப்படுகின்றன. சிவாஜியின் தொனி அழகு, கம்பீரம், குழைவு என மூன்றும் கலந்த கலவையாக இந்த வசனங்கள் அமைந்து இருக்கும்.
ஒரு கட்டத்தில், மிகவும் நேசித்த காதலி இனி தனக்குக் கிடைக்க மாட்டார் எனும் சூழல். அதே ஏக்கத்தில் விஷம் அருந்தி விடுவார் சிவாஜி. மணக்கோலத்தில் இருக்கும் காதலி உயிருக்குப் போராடும் காதலனை ஓடி வந்து பார்ப்பார். காதலியைப் பார்த்த சிவாஜி அந்தப் பரவசத்திலேயே மரணத்தின் பிடியில் இருந்து விடுபட்டு விடுவார். உண்மையான காதலின் சக்தியையும் மேன்மையையும் வெளிப்படுத்துவதாக இக்காட்சிகள் அமைந்திருக்கும்.
இப்படத்தின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறப்பு கே.வி.மஹாதேவனின் இசையில் அமைந்த பாடல்கள். “இரண்டு மனம் வேண்டும்” என்று தொடங்கும் பாடலில் கவிஞர், தன்னை ஏமாற்றிய காதலியை மறந்து வாழ ஒரு மனமும், நினைத்து வாட ஒரு மனமும் இறைவனிடம் கேட்பார். காதலி ஏமாற்றினாலும், விட்டுப் பிரிந்தாலும், அதன் பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளது என்று சொல்வதைப் போல் அமைந்திருக்கும் இவ்வரிகள்.
இப்பாடலின் சரணத்தில்,
“கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?”
என்று இறைவனை நோக்கிப் புலம்புவதைப் போல் இருக்கும் வரிகள் அற்புதமானவை.
“யாருக்காக? இது யாருக்காக?” என்ற பாடலில் ஒரு வரியில்,
“கண்கள் தீட்டும் காதல் என்பது - அது
கண்ணீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது – நம்மைப்
பித்தனாக்கி அலைய வைப்பது!”
என்ற வரிகள் பெண்களின் அன்(ம்)பால் காயம்பட்ட பலருக்கு மருந்தாக இருக்கும்.
1972-இல் வெளியாகி, சுமார் இரண்டு வருடங்கள் வசூலை வாரிக் குவித்த படம் – வசந்தமாளிகை.
“எனக்கு என்ன பெரிய வசந்தமாளிகையா கட்டி வச்சி இருக்கீங்க?” என்று கணவனைப் பார்த்துக் கேட்காத இல்லத்தரசிகள் யாருமே இருக்க மாட்டார்கள் தமிழ்நாட்டில். அந்த அளவுக்குத் தமிழர்கள் மனத்தில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்துவிட்ட காதல் காவியம் இது.
கடந்த ஆண்டு வசந்தமாளிகை ரீ-ரிலீஸ் செய்தபோதும் சிறப்பான வசூல் செய்தது. இயக்குநர் பிரகாஷ்ராவும், தயாரிப்பாளர் ராம நாயுடுவும் இணைந்து மகாகலைஞன் சிவாஜியை வைத்து எழுப்பிய இந்த வசந்தமாளிகை இன்னும் எத்தனை காலம் ஆனாலும் புகழ் ஓங்க நிற்கும் என்பதில் ஐயமில்லை.
--ஓ.கே கட்!
படைப்பு
✎ ராகவ்
Comments