ஷோபாசக்தி
"நான் பாரீஸுக்குப் போனவுடனே சிவசக்தி என்ற பெயரில் எழுதினேன். ‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய்’ என்ற பாரதியின் வரியில் இருந்து எடுத்தது. அன்ரனிதாசன் என்ற பெயரிலும் சிலவற்றை எழுதினேன். அப்போது பணக் கஷ்டம், அகதி வழக்கை வேறு நடத்தியாக வேண்டும். அதனால் இரண்டு இலக்கியப் பரிசுப் போட்டிகளுக்குக் கதையும் கவிதையும் அனுப்பினேன். இரண்டு போட்டிகளிலுமே கதைக்கு இரண்டாம் பரிசு; கவிதைக்கு முதல் பரிசு. ஆனால், இந்த இடைவெளியில் கட்சியில் சேர்ந்துவிட்டேன். கட்சி இந்தப் பரிசுப் பணத்தை வாங்காதே என்றது. அதனால் நான் வாங்கவும் இல்லை. கட்சியைவிட்டு வெளியே வந்தபின் சிவசக்தி என்ற பெயரை விட்டுவிட வேண்டும் என்று என் அறவுணர்வு சொன்னது. பாரதிதாசன், சுப்புரத்தினதாசன் என்றெல்லாம் நமக்குப் பிடித்த ஆளுமைகளின் பெயரைச் சூடிக்கொள்வது நம் வழக்கமல்லவா. போதாக்குறைக்கு அப்போது ஜெயமோகனதாசன் என்றொருவர் வேறு சுற்றிக்கொண்டிருந்தார். அதனால், எனக்குப் பிடித்த கலைஞர் ஒருவரின் பெயரை நான் சூட்டிக்கொள்ள நினைத்தேன். ஜெயகாந்தனை எனக்குப் பிடிக்கும். ஆனால், ஜெயசக்தி என்ற பெயர் பிடிக்கவில்லை. எனக்கு நடிகை ‘பசி’ ஷோபாவை மிகவும் பிடிக்கும். அதனால் ஷோபாசக்தி என்று வைத்துக்கொண்டேன். ‘ஷோபாசக்தி’ ஆனபிறகு, எழுதிய கதைகளைத்தான் தொகுப்பாக்கியுள்ளேன். சிவசக்தி மற்றும் அன்ரனிதாசன் எனும் பெயரில் எழுதியவற்றை மூடி மறைத்துவிட்டேன். ஆனால், என் செல்ல விமர்சகர்கள் அவற்றைக் கண்டுபிடித்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். அவையெல்லாம் தமிழ் தேசியத்துக்கு அறைகூவும் கதைகளும் கவிதைகளும். ஷோபாசக்தி என்கிற பெயரில் நான் எழுதிய முதல் கதை ‘எலி வேட்டை’. ”
- ஷோபாசக்தி
நன்றி: தடம் விகடன்
Comments