முன்ஜென்ம வினை தீர சித்ரா குப்த வழிபாடு

 முன்ஜென்ம வினை தீர சித்ரா குப்த வழிபாடு



இந்துக்களின் பண்டிகைக்கும் பௌர்ணமிக்கும் நிறைய தொடர்புண்டு. அதுலயும் சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது.  வசந்தக்கால தொடக்கம் சித்திரை  மாதம். அதேப்போல,  சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது.  மத்த பௌர்ணமிக்கில்லாத சிறப்பு இந்த பௌர்ணமி ஏன் விசேஷமானதுன்னு இனி பார்க்கலாம்.


 குடும்பம், வியாபார செய்யும் இடம்ன்னு எங்கும்  வரவு, செலவுலாம் சரிவர கணக்கு வச்சு நிர்வகித்தால்  அந்த இடம் ஓகோன்னு வரும். அப்படி வரவு செலவை பார்த்துக்குறவங்களுக்கு வயசுல சின்னவங்களா இருந்தாலும் அங்கு மரியாதை, பொறுப்புன்னு சற்று தூக்கலா இருக்கும்.  சாதாரண வீடு, கடைக்கே இப்படின்னா, உயிர்களின் பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, சுகம் துக்கம்ன்னு வரவு செலவு வச்சுக்குற வேலை எப்பேற்பட்டது?! எந்தவித சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் எள்முனை அளவும் தன் கடமைல இருந்து தவறாமல் கடமையை ஆற்றிவருபவர் சித்திரகுப்தன். இவரின் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படுது.


 வட இந்திய கதை...


 வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த  தெய்வம் இந்த சித்திரகுப்தன். வட இந்திய மதமான சமண மதத்தின் தெய்வம் இவர்ன்னும் சொல்லப்படுது. சமண மதம் மட்டும்தான் இறப்பை முன்னிறுத்தி அறம் கூறுவதால், மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.


 தென் இந்திய கதை.....

 கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் உணர்ந்து சிவப்பெருமானிடம் முறையிட்டார். சிவப்பெருமான் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவப்பெருமானின் கட்டளையை  சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார்.  சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாறியது.   நீளாவதியின் அழகில் மயங்கி அவளை மணக்கிறார். அதன் விளைவாய்  சித்திரகுப்தன் பிறந்தார், சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. கர்ணன் கவசகுண்டலங்களோடு பிறந்த மாதிரி ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு கொண்ட நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார்.  பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்லுது.


 அனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள்.  


அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென  எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார்.  சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்திரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று. விரதமிருந்து  சித்திரகுப்தனை  வழிப்படுவோரின் பாவச்சுமை ஏறாதென சிவப்பெருமான் வாக்களித்தார். சித்திரக்குப்தனின் திருமணநாளும் சித்ரா பௌர்ணமியே.



காமதேனு மகனாய்....

அகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவப்பெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்திரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்திரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துறதில்லையாம்.


 சித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் மனதில் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும்.  இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின்  செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.



 சித்ரகுப்தனை வழிபடும் முறை...


🌹🌿 பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானையும் அவருக்கு அருகில்  தேங்காய்க்கு பதிலாய் மாங்காய் வைத்த கும்பம்   வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து  சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள், பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், பனங்காய் வைத்துப் படைக்க வேண்டும்.  தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து குழம்பு வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயாசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், மற்றும் நீர்மோர்  வைத்து படைக்க வேண்டும். நம் வாழ்வு இனிமையாய் இருக்க இனிப்புகளும். கனிவாக வாழ்வமைய கனிகளும்  படைக்க வேண்டும்.. நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். வீட்டில்  மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறனும்ன்னு மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபாடு செய்கின்றோம்.  மா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கல சொம்பில் நீரும், செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் வழக்கம். 



 இவரை, பக்கம் பக்கமாய்  மந்திரங்கள் கொண்டு ஜெபிக்க வேண்டாம். செய்த தவறுகளை எண்ணி மலையளவு செய்த பாவத்தினை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எண்ணி எம்மை காப்பாற்றுங்கள் என வேண்டினாலே போதும். இவரருக்கு பானகம் பிடித்த நைவேத்தியம்.   இத்தினத்தில், எண்ணெய் தேய்த்து குளித்தலும் நல்லது. இதுவரை செய்த பாவங்களை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று இதற்கு பொருள்.   இத்தினத்தில் நீர்தானம், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் தானம் செய்வது சிறந்தது.  கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் இருக்கு.  காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி