சிறுநீரக - நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்*
*சிறுநீரக - நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்*
எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று. அதுபோல் நிறைய பேர் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். அப்படி சிறுநீரக மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பொட்டாசியம், சோடா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். அல்லது ஜீரணமாகுவதற்கு கடினமாக இருக்கும். ரத்தத்தை வடிகட்டவும், கழிவுப்பொருட்களை அகற்றவும் உதவும் சிறுநீரகங்கள் அந்த வகை உணவுகளை உட்கொள்வதற்கு கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
மேலும் வயது அதிகரிக்கும்போது சிறுநீரகங்கள் குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும். எனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் உணவில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுக் கட்டுப்பாடுகளை கவனிக்காவிட்டால் சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உலர்த்துதல், உப்பிடுதல், வெப்பத்தில் சூடுபடுத்துதல் போன்ற செயல்முறைகள் மூலம் பதப்படுத்தப்பட்டிருக்கும். அதனால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் வெளியேறிவிடும். பன்றி இறைச்சியை பதப்படுத்தி தயாரிக்கப்படும் பேக்கன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது கோழி இறைச்சியுடன் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் கலந்து தயார் செய்யப்படும் இறைச்சி, வகையான சாசேஜ் போன்றவற்றை சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட அந்த உணவுகளில் அதிக சோடியம் உள்ளன. இது தினசரி அனுமதிக்கப்பட்ட அளவுகளில் 60 முதல் 70 சதவீதம் அதிகமாகும். எனவே அத்தகைய உணவுகளை தினமும் உட்கொண்டால் சிறுநீரக செயல்பாடுகளை சிதைத்துவிடும்.
அடர் நிற சோடாக்கள்:
இப்போது சோடாக்கள் பல்வேறு வண்ணங்களிலும், சுவைகளிலும் வெளிவருகின்றன. பெரும்பாலும் குளிர்பானங்களில் அதிக அளவு பாஸ்பரஸ் கொண்ட அடர் நிற சோடாக்கள் கலக்கப்படுகின்றன. 350 மி.லி. கொண்ட பானங்களில் 90 முதல் 180 மி.கி வரை சோடாக்கள் சேர்க்கப்படுகின்றன. இது நீரிழிவு நோயாளிக்கு அனுமதிக்கப்படும் பாஸ்பரஸ் அளவை விட பல மடங்கு அதிகம். அடர் நிற சோடாக்கள் உணவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதய நோய்க்கு வித்திடக்கூடும். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்கள்:
சிறுநீரக நோய், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக சர்க்கரை அல்லது பொட்டாசியம் உள்ளடங்கிய பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது. அவற்றுள் அவகேடோ, ஆப்ரிகாட், கிவி, ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும் இந்த பழங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய வேறு சில ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். திராட்சை, அன்னாசி, மாம்பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் சீரான அளவில் பொட்டாசியம் உள்ளடங்கி இருக்கும். அவற்றை உட்கொள்ளலாம்.
உலர் பழங்கள்:
சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்களை தவித்துவிடுவதும் நல்லது. ஏனெனில் இந்த பழங்களை உலர வைக்கும் செயல்முறையின்போது அதிலிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அவற்றினுள் சர்க்கரை, பொட்டாசியம் போன்ற தாதுக்கள்தான் அதிகம் உள்ளதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளி கள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை வேகமாக ஜீரணிக்கப்படுவது அவர் களின் உடல்நிலையை பாதிக்கலாம்.
பழச்சாறுகள்:
நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட பழச்சாறு பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை, அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்கின்றன. எனவே வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அதில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவது நல்லது. எனினும் அடிக்கடி பருகக்கூடாது. எப்போதாவது ருசிக்கலாம்.
பச்சை இலை காய்கறிகள்:
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பச்சை இலை காய்கறிகளில் பசலைக்கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை முக்கியமானவை. அவற்றுள் பொட்டாசியத்தின் அளவு சிறியதாக இருந்தாலும், அது பிரச்சினையை ஏற்படுத்தும்.மேலும் இந்த காய்கறிகளில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது நோய் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்கக்கூடும். எனவே இந்த பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது
Comments