அறிஞர் ஔவை நடராசன்

 நீடு வாழ்க அறிஞர்

ஔவை நடராசன் அவர்கள்!

*


சொற்பொழிவில் தனக்கெனத் தனிப் பாணி கொண்டவர் முனைவர் பேராசிரியர் ஔவை நடராஜன் அவர்கள். 


அவரது பேச்சு கேட்டவர்களை வியக்கவைக்கும் . கேட்காதவர்களை எப்போது இவர் உரையைக் கேட்போமோ எனக் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டும். அவர் சொல்லை வெல்ல இன்னொரு சொல் உண்டோ என எண்ணி எண்ணி மலைக்கவைக்கும்.


இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கண, இலக்கியங்களின் மீதான அவரது ஆளுமை எவரையும் வியக்க வைக்கக் கூடியது. அதே போல் ஆங்கில இலக்கியப் புலமை. 


ஒரு பாடலை எடுத்து உரை கூறினார் என்றால் அதைத்தாண்டி இன்னொருவர் உரைவளம் காண இயுலுமா என நம் புருவங்கள் உயர்ந்துவிடும். 

உரையாசிரியர் என்பது இவரது பாரம்பரிய அணுக்களிலேயே பதிவான ஒன்று. 


தொல்காப்பியம் குறித்த ஔவையின் சிற்றுரை ஒன்றைக் கவிஞர் வைரமுத்து அவர்களின் 'தமிழாற்றுப்படை' விழாவில் கேட்டேன். பதினைந்து நிமிடங்களில் அதன் சாரத்தைப் பிழிந்து தந்துவிட்டார். நான் முதுகலை படிக்கும்போது அதைக் கேட்கவில்லையே என வருந்தினேன். 


அதே போலக் கம்பன் விழாக்களில் கம்பராமாயண உரைகள் பலவற்றை , சென்னை, தேரெழுந்தூர் என வெவ்வேறு ஊர்களில் கேட்டிருக்கிறேன். கம்பனின் ஒவ்வொரு சொல்லிலும் நுட்பம் காண்பார். அதன் பொருள் என்னவென்று துல்லியமாக விளக்குவார். அதற்குத் துணையாகத் திருக்குறள், சிலம்பு, ஆழ்வார்கள், சங்கம் எனப் பல்வேறு இலக்கியங்களிலிருந்து அவர் காட்டுகிற மேற்கோள் கடலளவு விரிந்து விடும். அயல் இலக்கியங்களின் ஒப்பீடு வேறு. கம்பன் அதைக் கேட்டால் அனுமனை இராமன் கொண்டதைப் போல ஔவையை ஆரத் தழுவிக் கொள்வான். தர்க்கரீதியாக உரையை அவர் வளர்த்துச் செல்வதே பேரழகான ஒரு உரை ஓவியம். கம்பன் மொழியில் சொன்னால் செவிநுகர்க் கனி.


அவர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்தபோது தலைமைச் செயலகத்தில் அவரைச் சந்தித்து இருக்கிறேன். 


அதேபோல் அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியபோது என் நண்பர்கள் தேனுகா,  ரவிசுப்ரமணியன் ஆகிகியரோடு போய்ச் சந்தித்திருக்கிறேன். 


இலக்கிய விழாக்களில், திருமண விழாக்களில் சந்தித்திருக்கிறேன். அறிஞர் கூட்டம் எப்போதும் அவர் அருகில் இருக்கும். இளைஞர் கூட்டம் அவரை நெருங்கிச் சூழ்ந்திருக்கும்.  எல்லோருக்கும் இனியவர்.


யார் இருந்தாலும், எங்கும், எப்போதும் அவர் ஒரே மனிதர்தான். எப்போதும் தமிழ்ப் பேச்சுதான். தமிழ் குறித்த பேச்சுதான். 

அவர் பேச்சும் மூச்சும் தமிழே. 


அவர்  காலத்தில் நாம் வாழ்வது நம்முடைய பெருமை. 


அவரை அவரது இந்த 87 ஆவது பிறந்த நாளில் வணங்கி வாழ்த்துகிறேன்.


நாளும் நமக்கு  அருந்தமிழ் தரும்   ஔவைக்கு

அதியன் தந்த அருநெல்லிக்கனி  பெயர்க்காரணம் கொண்டே கிடைக்கவேண்டும். ஔவையின் தமிழ் போல் அவர் நீண்ட ஆயுள் பெறவேண்டும்.


நீடு புகழ் கொண்ட அறிஞரே! 

நீண்ட வரலாறு படைத்த தலைமைப் புலவரே! 

நீங்கள் நீடு வாழ்க!


உங்கள் நிழலில் 

நாங்கள் இளைப்பாறி இன்புறுவோம் 

தமிழ்த் தேன் பருகியவாறு.

*

பிருந்தா சாரதி


*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி