தமிழ்தான் இனிப்பு மொழி

 தமிழ்தான் இணைப்பு மொழி

தமிழ்தான் இனிப்பு மொழி 


இதில் எதை ஏ.ஆர்.இரகுமான் சொன்னார் என்று தெரியவில்லை.


ஆர்ப்பரித்த பல குரல்களுக்கும், இரைச்சல்களுக்கும் மத்தியில், காரில் ஏறிக்கொண்டே ஏ.ஆர்.இரகுமான் சொன்ன அந்த ஒரு வரி பதில்  ”தமிழ்தான் இணைப்பு மொழி” என்று கூறியதாகவே பரவ ஆரம்பித்துவிட்டது. அதை இரகுமானும் மறுக்கவில்லை என்பதால், தமிழ்தான் இணைப்பு மொழி என்று அவர் கூறியதாகவே நானும் ஏற்கிறேன். 


ஆனால் இனி இரகுமானின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியல் உள்ளர்த்தங்களுடன்தான் பார்க்கப்படும். அவர் இதுவரை சந்தித்திராத வன்மங்கள் அவர்மேல் எறியப்படும். அதை அவரும் உணர்ந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் அவர் திரைத் துறையில் பிரபலமான உடனேயே விஷமக் கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளில் வெளியாகின. அதைத் தாண்டித்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இப்போதும் அவரை விமர்சித்து வரும் கண்டனக் குரல்கள், விஷம் தோய்ந்ததாக விஷமத்தனத்துடன்தான் இருக்கின்றன.


அந்த வகையில் அவருடைய நகர்வுகள் துணிச்சலானது என்றாலும், அந்த துணிச்சலுக்கு அவர் கொடுக்கப்போகும் விலை என்ன? ஒரு புறம் பெரும்பாலான தமிழர்கள் அவரை முன்னெப்போதையும் விட உச்சி முகர்ந்து கொண்டாடுகிறார்கள். மறு புறம் ஒரு சிறிய கூட்டம் அவரை தங்கள் அரசியல் எதிரியாக பார்க்கத் துவங்கிவிட்டார்கள். இரண்டையும் இரகுமான் சந்தித்துதான் ஆக வேண்டும்.


நாடெங்கும் மதத்தாலும், மொழியாலும் பிளவுகள் விதைக்கப்படும்போது, அது தவறு என சுட்டிக்காட்டும் ஒரு கலைஞனாக ஏ.ஆர்.இரகுமான் மிகத் தைரியமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  


அவரது இசையைப் போலவே அவரது இந்த அரசியல் குரலும் இந்திய எல்லைகளைத் தாண்டியும் ஒலிக்கும். எனவே அவரை சீண்டும் வகையில் அவர் மேல் உடனடியாக நேரடி அரசியல் தாக்குதல் எதுவும் இருக்காது எனத் தோன்றுகிறது. ஆனாலும் அரசியல் கழுகுகள் அவரை வட்டமிடத் துவங்கிவிட்டன என்பது உண்மை. நிச்சயம் எதிர் வினை இருக்கும்.


இந்தி மட்டுமல்ல, தமிழாகவே இருந்தாலும் அதை பிறர் மேல் திணிக்க எவருக்கும் உரிமை இல்லை.


பன்முகத் தன்மையே இந்தியாவின் அழகு. அதை மாற்றி ஒரே மொழியையும், ஒரே மதத்தையும் திணிக்க நினைத்தால் ஒற்றுமை குலைந்துபோகும்.


எனவே இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்க நினைக்கும் குரல்கள் இந்த நேரத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். தற்போது இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நாம் கேட்டிருக்கும் ஒரு அபூர்வக் குரல், ஏ.ஆர்.ரகுமானின் குரல். அந்தக் குரல் எனக்குப் பிடித்திருக்கிறது. அது நம்பிக்கை தருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை எவராலும் பிரிக்க முடியாது என்கிற கருத்தை வலியுறுத்துகிறது. எனவே நான் ஏ.ஆர்.இரகுமானின் பக்கம் அவருக்குத் துணையாக நிற்கிறேன்.


ISR செல்வகுமார்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி