10 நிமிடத்தில் புதினா ஊறுகாய் இப்படி செய்து வைத்தால் 1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது

 10 நிமிடத்தில் புதினா ஊறுகாய் இப்படி செய்து வைத்தால் 1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது




ஜீரணத்திற்கு அதிகம் உதவும் புதினா ஊறுகாய் நாம் கைப்பட பக்குவமாக வீட்டிலேயே பத்து நிமிடத்தில் அரைத்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை வைத்திருந்து கலவை சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் திடீரென இட்லி, தோசைக்கு சட்னி செய்யவில்லை என்றாலும் இதை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்!


புதினா ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்: புதினா – ஒரு கட்டு, வெள்ளை எள்ளு – ஒரு ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், தனியா விதைகள்  2 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – 5, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய் – 10, கல் உப்பு – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு.


புதினா ஊறுகாய் செய்முறை விளக்கம்: முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் தனியா விதை, வெந்தயம் மற்றும் வெள்ளை எள் ஆகியவற்றை மட்டும் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பாதி அளவிற்கு வறுபட்டதும் காஷ்மீரி மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் காரம் இல்லாவிட்டாலும் நல்ல நிறம் கொடுக்கும்

. உங்களிடம் காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் சாதாரண மிளகாய் 7 சேர்த்துக் கொண்டால் போதும். மிளகாய் லேசாக வறுபட்டு சூடேறியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பிறகு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்து லேசாக வறுத்து எண்ணெயை வடிகட்டி புளியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்


. பின்னர் மீதமிருக்கும் எண்ணெயில் நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்து நன்கு சுருள வதக்கிக் கொள்ள வேண்டும். புதினா இலைகளை சுத்தம் செய்யும் பொழுது ஒரு முறை தட்டி விட்டு சுத்தம் செய்தால் இலைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூச்சி, புழுக்கள் கீழே விழுந்து விடும். அதன் பிறகு இலைகளை ஆய்ந்து நல்ல தண்ணீரில் நன்கு அலசி உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இப்போது நீங்கள் வறுத்து வைத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்ததை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே மிக்சி ஜாரில் வறுத்து வைத்துள்ள புளி மற்றும் புதினா இலைகள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைக்க வேண்டும். பிறகு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். மூன்று இடித்த பூண்டு பல், 3 காஞ்ச மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து லேசாக வதக்கி பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.


 அடிப்பிடிக்காமல் அடுப்பை குறைவாக வைத்துக் கொண்டு வதக்கிய பின்பு, நீங்கள் புதினா, புளி, உப்பு போட்டு அரைத்த விழுதையும் சேர்க்க வேண்டும். இப்போது இவற்றின் பச்சை வாசனை போக நன்கு எண்ணெய் தெளிய வதக்கி விட வேண்டும். இடையிடையே உங்களுக்கு தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் தெளிந்து மேலே வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத புதினா ஊறுகாய் தயார்!



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி