#பாகப்பிரிவினை - பரம்பரைச் சொத்துரிமை இறக்கம் (Law of #Inheritance)

 #பாகப்பிரிவினை - பரம்பரைச் சொத்துரிமை இறக்கம் (Law of #Inheritance)



முஸ்லிம் ஒருவர் இறந்து, அவர் தம்முடைய வாரிசுகளையும், சொத்துக்களையும் விட்டுச் சென்றால், அவருடைய சொத்து முஸ்லிம் வாரிசுகளுக்கு #ஹரியத் சட்டப்படி பிரித்து கொடுக்கப்பட வேண்டும். முதலில் அவருடைய (மையத்து) இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பட்ட செலவுகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்பின் அவருக்கு கடன் ஏதேனும் இருந்தால் அதையும் கொடுக்க வேண்டும். பின்னர் மீதியுள்ளதில் மூன்றில் ஒரு பங்குக்கு உயில் ஏதேனும் எழுதி வைத்திருந்தால், அதையும் கொடுத்து அதுபோக எஞ்சியிருக்கும் சொத்துக்களை முஸ்லிம் வாரிசுகளுக்கு அவரவருக்கு சேர வேண்டிய பங்கு விகிதப்படி பிரித்து கொடுக்க வேண்டும்.


இறந்தவர் #உயில் எழுதி வைத்திருந்தால், அது மாநகரங்களிலுள்ள அசையாச் சொத்தை பொறுத்ததாகவோ, அல்லது மாநகரங்களின் எல்லைக்குட்பட்ட முகவரியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலோ அதை பொறுத்து உயில் மெய்பிதழ் (propate) அல்லது நிர்வாக அதிகார பத்திரம் (letters of administration) ஏதேனும் ஒன்று நீதிமன்றத்திலிருந்து பெற வேண்டும். இதற்கான செலவுத் தொகையையும் இறந்தவர் விட்டுச்சென்ற சொத்திலிருந்தே கொடுக்க வேண்டும். பெரும்பாலும் இறந்தவர் சார்ந்திருந்த பிரிவைப் (மதுஹபைப்) பின்பற்றியே பாகம் பிரிக்க வேண்டும். இந்தியாவில் பொதுவாக ஹனபிப் பிரிவினரே பெரும்பான்மையாக இருப்பதால், அப்பிரிவின்படியே பங்கு பிரிக்க நீதிமன்றங்கள் வகை செய்யும். ஆயினும் மற்றைய பிரிவுகளின் அடிப்படையிலும், நீதி கேட்டு பெற முடியும். எல்லா பிரிவினரும் (ஷியாவைத் தவிர) பொதுவாக சட்ட வல்லுநர் சிறாஜின் பகுப்பு முறையைப் பின்பற்றியே முடிவுகள் எடுக்கின்றனர். அவருடைய சிராஜியா என்னும் புத்தகமே ஆதாரப்பூர்வமானதாக எல்லா பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


பிற மதச் சட்டத்தில் உள்ளது போல மூதாதையர் சொத்து - தானே தேடிய சொத்து - கூட்டுக் குடும்ப சொத்து - அசையும் சொத்து - அசையா சொத்து என்ற பாகுபாடு செய்து சொத்தை வாரிசுகளுக்கு பிரிக்க வேண்டியதில்லை. ஏனெனில் முஸ்லிம் சட்டத்தில் அவ்விதப் பாகுபாடு கிடையாது. எல்லாச் சொத்தும் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் அடங்கிவிடும்.


குறிப்பிட்ட குடும்ப வழக்கம் நிரூபிக்கப்பட்டால் தவிர, மூத்தவனே முதல் #வாரிசு (Rule of Primogeniture) இளையவனுக்கே வீடு என்ற வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எல்லாருக்கும் அவரவர் விகிதப்படி பங்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆயினும் வட்டார வழக்கங்கள், குடும்ப வழக்கங்கள் படி சில முன்னுரிமைகள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மூத்தமகன், தந்தை பயன்படுத்திய திருக்குர்ஆன், மோதிரம், கைத்தடி, செய்து வந்த மதச் சடங்குகளை செய்வதில் முன்னுரிமை கோரலாம். ஆனால் இதற்கு நிரூபணம் தேவை.


#முஸ்லிம் சட்டம் ஆணும், பெண்ணும் அவரவர் விதிதப்படி பங்கினைப் பெறுவதில் சம உரிமை வழங்குகிறது.


வாரிசுகள் ஒவ்வொருவரும் இறந்தவரின் சொத்தில் சேர்ந்தடை சொத்துரிமை இறக்கம் (vested inheritance) பெற்றவர் ஆவார்கள். அதாவது இறந்தவரின் சொத்துக்கு வாரிசுகள் உரிமையாளர் ஆகிவிடுவர். குறிப்பாக அவரவர் பங்கு விகிதப்படி இறந்தவரின் உயிர் பிரிந்தவுடன் அதற்கு உரிமையாளர் ஆகிவிடுகிறார்கள். இறந்தவரின் சொத்தில் வாரிசுகளுக்கு உடனடி சொத்துரிமை இறக்கம் ஏற்பட்டு விடுவதால், விகிதம் அனுசரித்து பாகம் பிரிக்கப்படாது இருப்பினும், தத்தம் பங்கை பாராதீனம் செய்யும் உரிமை பெற்று விடுகிறார்கள். சொத்தை பங்கு போட வேண்டும் என்பது ஒரு நடைமுறைப்படுத்தும் செயலே ஆகும். பாகம் பிரிக்கப்படும் முன்னரே ஒரு பங்குதாரர் இறந்து போனாலும், அவருடைய பங்கு அவருடைய வாரிசுகளை போய்ச் சேரும். அவருடைய வாரிசுகள் அப்பங்கிற்கு உரிமை பெற்றவர் ஆகிவிடுகிறார்கள். எனவே இச்சொத்துரிமை இறக்கம் பாகப்பிரிவினை என்று அழைக்கப்படும்.


முஸ்லிம் (#Muslim )யார்? என்பதற்கு " P. P. Puthiyanal Attakoya thangal Vs Union Territory of Lakshadeep and Another (1998 - CRL. LJ - 1206)" என்ற வழக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி