சமூக சேவகரான மடாதிபதி
சமூக சேவகரான மடாதிபதி
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் நான்காவது வார்ஷிக ஆராதனை 15-3-22 (செவ்வாய்) காஞ்சி மடத்தில் அனுசரிக்கப்படுகிறது
பழுதடைந்த பல்வேறு கோவில்களை ஸ்ரீ ஜெயேந்திரர் மீட்டெடுத்திருக்கிறார்.
ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி, ஆதரவற்ற முதியவர், சிறார், மாற்றுத்திறனாளி
இல்லங்கள், தேவைப்படும் இடங்களில் ஈமச் சடங்குகள், வேலையில்லா இளைஞர் பயிற்சி, வாழ்வாதாரப்
பயிற்சி, சுய வேலை வாய்ப்புத் திட்டம்,அநேக சுயஉதவிக்
குழுக்கள் என்று செய்திருக்கிறார். 3000 ஏக்கர் நிலம்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாய் வழங்கப்பட்டிருக்கிறது. கலவையில்
மாற்றுத்திறனாளிகள் இல்லம் திறக்கப்பட்டு இன்று பராமரிக்கப் படுகிறது.
மூன்று சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள், மனநலம் சரியில்லாத குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தரமான
மருத்துவ சோதனை, ஆய்வுகள், மருந்துகள் என
அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தம் துறையில் வெற்றிகரமாக உள்ள
மருத்துவர்கள் சென்னை மற்றும் இதர நகரங்களிலிருந்து வரவழைக்கப் பட்டு சிறப்பான
சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்வி நிலையங்கள் வசதி படைத்த, உதவும் எண்ணம் கொண்ட
பலரும் ஆரம்பிப்பது தான். ஆனால் ரொம்ப பிரயத்தனம் செய்து காஞ்சி அருகே ஏனாத்தூரில்
ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் , பழைய
ஓலைச்சுவடிகள் சேகரித்து, பாதுகாத்து, அந்த அரிய பொக்கிஷ தகவல்களை மின்னணு பரிமாற்றம் செய்யும்
பொறுப்பும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இதெல்லாம் போக தம் குருமார்கள் செய்த ஆன்மிக, சமூகப் பணிகளையும், சந்திரமௌலீஸ்வரர் பூஜை, புனஸ்கார மடப்
பொறுப்புகளையும் ஸ்ரீ ஜெயேந்திரர் இனிதே நிறைவேற்றினார். 50க்கும்
மேற்பட்ட பாரம்பரிய பாடசாலைகள் தலைமுறையினருக்கு வேதம் இன்று பயிற்றுவிக்கின்றன.அன்னதானம்,பிடியரிசித் திட்டம், மும்பை தாராவி போன்ற
சேரிப் பகுதிகளில் சமூக, ஆன்மிகப் பணிகள், பசு பராமரிப்பு, நலிந்த இசை
விற்பன்னர்கள் போன்றவர்களுக்கு உதவி, அவ்வப்போது இயற்கைச்
சீற்றத்திற்குப் பலியானவர்களுக்கு உதவிகள் என்று பல்வேறு பணிகளும் அவர்
மேற்பார்வையில் செவ்வனே நடந்தன.
ஸ்ரீ ஜெயேந்திரரை இன்று விமர்சிக்கும் பலரும் திரும்பத் திரும்ப இரண்டு
விஷயங்களைச் சொல்கிறார்கள். எண்பதுகளின் கடைசியில் அவர் சில நாட்கள் சொல்லாமல்
கொள்ளாமல் மடத்தைப் பிரிந்திருந்தது. தமிழக அரசு சுமார் ஒன்பது வருஷங்கள் அவர்
மேல் பல்வேறு குற்றங்கள் சுமத்தி சிறைக்கும் நீதி மன்றத்திற்கும் அலைக்கழிக்க விட்டது.
இப்போது அவர் மேலும் அவர் சீடர் மேலும் குற்றம் நிரூபணமாகாத சூழ்நிலையிலும் சொன்ன.
புகார்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பது ரொம்ப
வருத்தத்திற்குரிய விஷயம்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் தன் படைப்பு `ஜெய ஜெய சங்கர' வில் சொன்னது போல நாத்திகம் மலிந்து விட்ட தமிழகத்தில்
ஆன்மிக அன்பர்களும் ஆச்சார்யர்களும் தொடர்ந்து நம்பிக்கை இழக்காமல் நற்பணிகளைத்
தொடர்ந்து வருகிறார்கள்.
தொகுப்பு :ஸ்ரீதர் சாமா
Comments