வேர்கடலை துவையல் இட்லி

 வேர்கடலை துவையல் இட்லி

நாவூறும் வேர்கடலை துவையல் இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொட்டுக் கொள்ள கூட எதுவும் கேட்க மாட்டீர்கள்!




அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த வேர்கடலை துவையல் இப்படி ஒரு முறை நீங்களும் அரைத்துப் பாருங்கள்! சுவையான வேர்கடலை துவையல் எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.


வேர்க்கடலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 100 கிராம், தனியா விதைகள் – 3 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், வர மிளகாய் – 8, புளி – சிறுநெல்லி அளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

வேர்க்கடலைத் துவையல் செய்முறை விளக்கம்: வேர்க்கடலை துவையல் செய்ய முதலில் 100 கிராம் அளவிற்கு வறுத்த வேர்க்கடலையை முடிந்த அளவிற்கு தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

பின் அடுப்பை பற்ற வைத்து வாணலியை வையுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காயவிடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நீங்கள் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லேசாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணெயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேர்க்கடலையை போட்டு வறுக்க வேண்டும். வேர்க்கடலை பச்சை வாசம் போக, நல்ல மணம் வீச வறுக்க வேண்டும். பின்னர் தனியா விதைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றுடன் சீரகம், கடுகு, வெந்தயம் மேலே குறிப்பிட்டுள்ள அளவின்படி கொஞ்சமாக சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு வர மிளகாய் பயன்படுத்துவது நல்லது. நீட்டு காய்ந்த மிளகாய் அப்படியே காம்பு நீக்காமல் சேர்த்து வதக்க வேண்டும்.

காம்பு நீக்கி விட்டு சேர்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் வெளியில் வந்து விடும். இதனால் மிளகாய் கறுகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காம்புகளோடு அப்படியே சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இந்த பொருட்களெல்லாம் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் புளிப்பு சுவைக்கு தகுந்தவாறு புளியின் அளவை பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஆற வைத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த துவையலுக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக நீங்கள் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். இப்போது மிக்ஸியை இயக்கி நன்கு அரைக்காமல் கரகரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்னர் கடுகு, ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாறி பாருங்கள், அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி