காங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலங்கள்

 



ஒருமுறை காங்கிரஸ் ஊர்வலம் திருவல்லிக்கேணித் தேரடியில் துவங்குவதாகவும் ஊர்வலத்தை சிவாஜி கணேசன் துவக்கி வைப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. மதியம் 3 மணிக்குத் துவங்க வேண்டிய ஊர்வலம் சிவாஜி கணேசன் வராததால் 4 மணிவரை துவங்கவில்லை. இதற்கிடையே வேடிக்கை பார்க்க வந்த ஜனங்கள் எங்களிடம் ‘சிவாஜி வந்தால் அவரை சரியாகப் பார்க்க முடியுமா அல்லது அவசரமாய் புறப்பட்டு விடுவாரா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். “நேரமானாலும் பரவாயில்லை. நீங்கள் அவரைப் பார்ப்பதற்கு வசதியான சந்நிதித் தெருவில் ஒருமுறை அவரை வரச்சொல்கிறோம்” என்று சொல்லி வைத்திருந்தோம். சிவாஜி கணேசன் வந்தவுடன் அவரை அணுகி மக்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். அவருடன் வந்த நபரொருவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கிடையே எங்களோடு வந்த சிறுவனொருவன் சிவாஜி கணேசனைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேன் மீது ஏறிக் கையை நீட்டினான். இதைக்கண்டு சிவாஜி கணேசன் முகம் சுளித்தார். இதனால் கோபமுற்ற நாங்கள் ஊர்வலத்தை விட்டு வெளியேறினோம். இரவோடிரவாக ரசிகர் மன்றத்தை மாற்றி ‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம்’ என்று பெயரிட்டோம்.

சிம்சன் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சி நடத்திய ஊர்வலத்தில் நாங்கள் கலந்து கொண்டோம். ஊர்வலத்தைக் கலைக்க தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினார்கள். கட்சிக்காரர்களும் கொடியை உருவி விட்டுக் கையிலிருந்த கம்பத்தால் தாக்கினார்கள். சைக்கிள் டயரைக் கொளுத்தி வீசினார்கள். கண்ணீர்ப்புகை வீசினால் காற்றுத் திசைக்கேற்றவாறு ஓட வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டது.
காங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீசப்பட்டது என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள். இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக காமராஜர் ஒரு முயற்சி செய்தார். காங்கிரஸ் நடத்திய மௌன ஊர்வலத்தின்போது அண்ணாதுரை சிலைக்கருகே காமராஜர் நின்றுகொண்டார்.
ஊர்வலத்தில் வந்த தெய்வசிகாமணி என்ற இளைஞர் காமராஜரைப் பார்த்தவுடன் உற்சாக பூபதியாகி ‘காமராஜர் வாழ்க’ என்று குரல் எழுப்பினார்.
அவருக்குக் கிடைத்தது ஒரு அறை காமராஜரிடமிருந்து. மௌன ஊர்வலத்தில் சத்தம் போடக்கூடாதென்று தெய்வசிகாமணிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தெய்வசிகாமணி அசரவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தவைர் தன்னை அடித்த பெருமையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.
தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (ஜனவரி 1969) சேர்த்திருந்தார்கள். அவர் வந்த உடனே கேன்சர் இன்ஸ்ட்டிடியூட்டை மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். போலீஸால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. அங்கிருந்த எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். மந்திரிகளும் வரும்போதே அழுதுகொண்டே வந்தார்கள். நான் ஒரு லேம்ப் போஸ்டில் ஏறித் தொத்திக்கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்திலிருந்த ஒருவர் அழுதுகொண்டே கைக்கடிகாரத்தைக் கழற்றித் தூக்கி எறிந்தார். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்கள். கேட்டைத் திறந்துவிடச் சொல்லி அவர்கள் தலையை கேட்டில் மோதிக் கொண்டார்கள். சிலர் நடுத்தெருவில் புரண்டு அழுதார்கள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நானும் அழுதேன்.
பிறகு வேன் வேனாகப் போலீஸ் வந்தது. அண்ணா நலமாயிருக்கிறாரென்று மந்திரிகள் மைக்கில் பேசினார்கள். மக்கள் ஒருவாறு சமாதானமடைந்த பிறகு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொது மக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்டார்கள். பாதுகாப்பு எல்லைக்குள் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அனுமதி. பெரியப்பா வீடு இந்த எல்லைக்குள்ளேயே இருந்தது. ஆகவே, எங்களுடைய நடமாட்டத்திற்குத் தடையில்லை.
அண்ணாதுரை இங்கே ஒரு மாதமிருந்தார். எந்த நேரமும் அவர் இறந்துவிடக்கூடும் என்ற நிலைமையிருந்ததால் பந்தோபஸ்து போலீஸாருக்குக் கெடுபிடி அதிகம். குளியல், சாப்பாடு எல்லாமே பிரச்சனையாகிவிட்டது. எங்களுக்கும் போலீஸாருக்கும் இந்தச் சமயத்தில் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஷூவையும், காலுறையையும் கழட்டி விட்டு அவர்கள் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் வந்து ஓய்வெடுத்துக் கொள்வார்கள். மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் கிணற்றில் குளிப்பார்கள். அரசாங்கம் கொடுக்கும் பொட்டலச் சோற்றைச் சாப்பிட முடியாமல் அவர்கள் சிரமப்படும்போது அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து குழம்பு, ஊறுகாய், மோர் வாங்கிக் கொடுப்போம். லத்தி சார்ஜ் எப்படிச் செய்வது, போராட்டங்களை ஒடுக்க எப்படி சைக்கிள்களைப் போட்டு உடைப்பது என்பதையெல்லாம் அவர்கள் உற்சாகமாக விவரிப்பார்கள். ஒருநாள் காலையில் கண் விழித்தால் வாசலில் போலீஸ் இல்லை. இரவு அண்ணா காலமாகிவிட்டிருந்தார். இரவோடிரவாக எல்லாப் போலீஸாரும் ராஜாஜி மண்டபத்திற்குப் போய்விட்டார்கள்…
சில பயணங்கள் சில பதிவுகள்
- சுப்பு
நன்றி: வலம்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி