இது உனக்கான உலகம்
எல்லாவற்றையும் விட்டு
சாவதை விட
நம்பிக்கையை பிடித்துக்கொண்டு
வாழ்வது சுலபம்.
அச்சத்தை தூக்கி சுமந்து கொண்டு
ஓடுவதை விட
துணிச்சலை தாங்கி கொண்டு
நிற்பது சுலபம்.
கவலைகளை நினைத்துக் கொண்டு
உறங்குவதை விட
கற்பனைகளை மிதக்கவிட்டு
கனவு காண்பது சுலபம்.
இழந்ததை தேடிப் போவதைவிட
இருப்பதை தொலைக்காமல்
வாய்ப்புக்காக
வலை விரிப்பது சுலபம்.
தோல்வி என்பது துவள்வதற்கல்ல
திமிரி எழுவதற்கே
ஏமாற்றமென்பது கலங்குவதற்கல்ல
உண்மையை விளங்குவதற்கே
ஆறுதலுக்கு ஆட்களை தேடாதே
ஏற்றுக்கொள்..
புதிர் அவிழ்ந்திருக்கிறது
புரிதலுக்கு பரிசாக
புன்னகையை கொடு
ஆரோக்கியமாக இருக்கிறாய் தானே
நீயே செல்வந்தன்
உழைக்க வேண்டும் என
நினைக்கிறாய் தானே
நீயே வெற்றியாளன்
கொடுப்பதற்கு இல்லையே என
கவலைப்படுகிறாயா
நீயே வள்ளல்
இல்லாமையோ இயலாமையோ
நிரந்தரமல்ல..
முயலாமைக்கு மட்டும்
மூளையை கொடுக்காதே
மூளையை உன் மூலதனமாக்கு
முயற்சியை உன் முதலாளியாக்கு
பயிற்சியை உன் பணியாளாக்கு
கடமைக்கு கண்ணியத்தை கொடு
கண்ணியத்துக்கு கட்டுப்பாடு வேண்டாம்
வேறென்ன வேண்டும்
வா..
இது உனக்கான உலகம்
வாழ வழி தேடாதே
வழியெங்கும் வாழ்ந்து கொண்டே செல்
வயது என்பது
ஒரு வழி பாதை
வாழ்க்கை என்பது
கடக்க வேண்டிய பயணம்
சிரித்துக்கொண்டே வா
ரசித்துக்கொண்டே
உன்னோடு வர..
ஒரு கூட்டமே காத்திருக்கிறது
பயணம் இனிதாக
என் இனிய வாழ்த்துக்கள்.
👍👍👍👍👍👍👍
நயினார்
Comments
வாழ்க கவிஞரே