முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!”
“முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!”
இந்த வாக்கியம் உங்களுள் சில சலனங்களையும் அச்சங்களையும் முளைக்கவிடுகிறதா? எனில், கமலா தாஸ் எனும் அற்புத மனுஷியைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆபரணங்கள் மற்றும் ஆடைகளைக் அகற்றுவது குறித்து ஏன் அப்படி சொன்னார் என்பதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன்பு சில கேள்விகள்.
நீங்கள் ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் அன்பில் திளைத்திருக்கிறீர்களா? காமவயப்பட்டுள்ளீர்களா? காதலின் சூடான குளிர் ஊசிகளை நெஞ்சில் வாங்கியிருக்கிறீர்களா? நிச்சயம் அவை அழகான தருணங்கள். அந்த அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு எப்படி இருக்கும் எனத் தெரியுமா? மாதம் மாதம் மாதவிடாய் தருணங்கள், மாதவிடாய்க்கு முன்பான அந்த ஒரு வார உணர்வுக் கலவைகள் எனப் பெண்ணின் காதல் உணர்வுகளும் அத்தகையதே. ஆணின் காதல் கொண்டாட்டங்களைப் பதிவுசெய்தே வளர்ந்த இலக்கியங்களின் கட்டமைப்பே நம் சமூக அடித்தளம். பூவினால் தொட்டால்கூட சிறு கோடு விழுந்துவிடும் என்று தயங்கும் அளவுக்கு மென்மைகளின் இதழ்கள் வளர்த்த பெண்ணின் உணர்வுகள், காதல் தொட்டால் என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தும்? பெண்ணின் காதல் உணர்வுகளை, காம ஆசைகளை அத்தனை அழகியலுடன் ஆயிரம் வண்ணங்களாக ஒளிர ஒளிர எழுதியவர் கமலா தாஸ்.
எந்தப் பெண்ணைச் சுற்றிலும் வானம் நிறைந்திருக்கும்; வண்ணங்கள் நிறைந்திருக்கும்; அழகுப் பூத்துக் குலுங்கியிருக்கும். ஆனால், உயிர்சக்தி நிரம்பிய அவள் ஆற்றல் வானத்தில் சிறகுகள் விரிக்க ஒரு தடை இருக்கும். அது காதலோ, அடக்க இயலாத காமப் பெருக்கோ, ஆணுக்கே கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும்போது, பெண்ணின் பாலியல் ஆசைகள் குறித்து இங்கே பேசமுடியுமா? அதிகம் வேண்டாம், கணவனிடம் தன் பாலியல் ஆசைகளைத் தயக்கமின்றி கூறும் மனைவிகள் இங்கே எத்தனை பேர்? அது, பெண்ணின் மிகமிக அழகான பக்கங்களில் ஒன்று. பருவம் எய்துவது முதல் பதின் வயதுகளில் தன்னைக் கவரும் ஆணை பற்றிய ஒரு பெண்ணின் எண்ணங்கள் இன்றுவரை இலக்கியங்களில் முழுமையாகப் பதிவுசெய்யப்படவில்லை. மனிதகுல அழகியல் பக்கங்களின் அதியழகான பக்கங்கள் அவை. தன் கதைகளில், கவிதைகளில் அந்த அழகுகளை மனம் தொடும் மெல்லிசையாகப் படரவிட்டவர் கமலா தாஸ்.
கேரளத்தின் புண்ணையூர்குளம் என்ற சிறு கிராமமே கமலாதாஸின் பூர்வீகம். அவரின் தந்தை வீ.எம்.நாயர் ‘மாத்ருபூமி’ என்ற மலையாள நாளிதழின் ஆசிரியர். தாய் பாலாமணியம்மாள் மலையாளக் கவிஞர். இந்தப் பின்னணியில் வளர்ந்த கமலாதாஸ் இளமையிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கினார். அவரது பூர்வீக கிராமத்தின் நாலப்பாட்டு வீடு ‘என் கதை’யின் மூலம் மிகப் பிரபலமானது. தனது 15 வயதில் மாதவ் தாஸ் என்னும் வங்கி அதிகாரியை மணந்தார். அவரின் பெரும்பாலான நாள்கள் கொல்கத்தாவிலேயே கழிந்தன. அவரின் முதல் ஆறு கவிதை தொகுப்புகள் ஆங்கில மொழியில்தான் வெளிவந்தன. பின்பு, அவர் மலையாளத்திலும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அவரின் எழுத்தார்வத்திற்கு கணவர் மிகவும் உதவியாகயிருந்தார். பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யன், ஜாப்பனீஸ் போன்ற மொழிகளிலும் அவர் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்திய நவீன கவிதைகளின் தாய் என டைம்ஸ் பத்திரிக்கை இவரைக் குறிப்பிட்டிருக்கிறது.
மாதவிக்குட்டி, கமலா தாஸ் என்ற பெயர்களில் இலக்கியம் படைப்பார். என்றேனும் உங்கள் அம்மாவின் காதல்கள் குறித்துக் கேட்டிருக்கிறீர்களா? காதல் இல்லை நண்பர்களே… ‘காதல்கள்’தான். மனித மனம் நிச்சயம் குரங்குதான். அதில் சந்தேகம் கிடையாது. காதலையும் காமத்தையும் சுற்றி படுபயங்கரமான அபத்தங்களைப் பூசிவைத்திருக்கும் இந்தச் சமூகத்தில், தன் காதல்களையும் காம ஆசைகளையும் ‘என் கதை’யில் செதுக்கியவர் கமலா தாஸ். அது, அவரின் சுயசரிதை. காதல் என்பது ஒருமுறை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படைவாதக் கொள்கைகளை அடித்து உடைத்ததுதான் கமலா தாஸ் எழுத்துகளின் வெற்றி. உடனே முகம் சுளிக்க வேண்டாம் நண்பர்களே… ‘என் கதை’ நமக்கு கமலாதாஸின் கதையை மட்டுமின்றி, காதலையும் அறிமுகப்படுத்தும்.
இன்று காதல் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்கிறது. ‘நீ என்னைக் காதலிக்கிறாயா? காதலி! எனக்கும் பிடித்திருக்கிறது. திடீரென்று நானில்லாதபோது காமப் பசி எழுகிறதா? சம்மதம் சொல்லும் இணையுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள். என்னிடம் ஓர் ஆத்மார்த்தமான நட்பை உணர்கிறாயா? சில ஹார்மோன் துடிப்புகளை உணர்கிறாயா? நான் பாரம் சுமக்கும்போது கேளாமலேயே உன் தோளையும் மடியையும் தருவாயா? உன்னைத்தான் தேடுகிறேன், வா இணைந்து வாழலாம்’ என்கிறது.
இப்படியான சில அற்புதங்கள் நிகழ, கமலா தாஸின் எழுத்துகள் விதை போட்டிருக்கிறது எனச் சொன்னால் அது மிகையில்லை. இன்றுவரை குறும்பட லட்சுமியையே ஏற்றுக்கொள்ளாத சமூகம், கமலா தாஸை எப்படி எதிர்கொண்டிருக்கும்? ஆம்! அழுத்தங்கள், மிரட்டல் மயம்… தன் இறப்புக்குச் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறினார். கமலா சுரையா எனப் பெயரை மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுதினார். 2009 மே 31-ம் திகதி மறைந்தார்.
1934 மார்ச் 31-ம் திகதி பிறந்த கமலா தாஸின் பிறந்தநாள் இன்று. எதற்காக அவர் உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றுவது குறித்து பேசினார் தெரியுமா?
‘முதலில் என்னைச் சூழ்ந்துள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன். பின்பு, இந்த மெல்லிய அரக்கு நிறத் தோலையும் அதனுள் இருக்கும் எலும்புகளையும் உதறுகிறேன். இறுதியில் வீடற்ற, அனாதையான, அதியழகு நிறைந்த தோல், எலும்புகள் என அனைத்துக்கும் அடியில் உள்ள என் ஆன்மாவை உங்களால் காண இயலும் என நம்புகிறேன்’
நன்றி:துருவி.காம்
Comments