பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம்/#சர்வதேச_கவிதை_நாள் /#அன்புத்தோழி_ஜெயஸ்ரீ
பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம்
...........................இவை எந்தவொரு லட்சியத்தையும் மாற்றத்தையும் சிறு விதை, சிறு பொறி நிகழ்த்தக் கூடுமென்ற நம்பிக்கையை வழங்கும் அன்பிற்கினியவளின் கைகழுவிய கைகுலுக்கல், முகமூடி களைந்த புன்னகை அவ்வளவே.
உண்மையில், இவற்றை என்னவென்பது ? யோசித்துப் பார்த்தால் பழத்தைத் தின்றுவிட்டுப் பயனில்லை எனத் தூக்கிப்போட்ட புளியம்பழ விதைகளை பல்லாங்குழிக்கென எடுத்துச் சேர்த்து வைத்த பருவம் எய்தாப் பேதையின் ஆர்வமெனச் சொல்லலாம்.
தனக்குப் பிடித்தவர்களைக் காணும்போதெல்லாம் புன்னகை பூக்க வைக்க எந்தவித குற்றவுணர்வும் இன்றிப் பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம் எனக் கொள்ளலாம்.
நெடுஞ்சாலையின் சுடும் தார்க்குழம்பில் ஒட்டாது பெயர்ந்த கூரிய கருங்கற்களைத் தேடி எடுத்து ஐந்தாங்கல் ஆடியே வழுவழுக்கும் கூழாங்கற்களாக வடிவமைத்த வாலைக்குமரியின் எவரும் அறியா இலாவகம் எனலாம்.
இவ்வுலகமே உறவென்று கனிவோடும், மிடுக்கோடும் சுற்றிய ஏதோ ஒரு நாட்டு இளவரசியின் நெற்றி பொட்டுடைந்த இளைப்பாறல் நாட்களின் தேடல் மொழிகள் எனவும் சமாளிக்கலாம்.
நேராய்ச் சொல்கிறேன். நல்ல காற்றும், தொல்லையில்லா காதலும் மட்டுமே எல்லையில்லா இன்பத்தை மீட்டுத்தர முடியும் என தொலைந்து போன மலைக்காடுகளையும்,மழைக்காதலையும் தேடிக்கொண்டே இருப்பவளின் இடைவெளிக் கால உணர்மொழிகள் இவை.
என்னோடு நீங்கள் பயணிக்க வேண்டுமாயின் இயந்திரங்களோடு அல்லாது இதயங்களோடு பழகி இருத்தல் அவசியம்.ஏனெனில், இவள் ஒரு இலக்கியவாதி என்பதை விட இலக்கு உள்ள வியாதி என்பதே சரி.
பயணிப்போம்.
......என்னுரையிலிருந்து
தமிழின் வாசமே சுவாசம்
அனைவருக்கும் சர்வதேச கவிதைநாள்
வாழ்த்துக்கள்
..
Comments