பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனுஷ்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மனுஷ்...
கவிதையில் நீங்கள் செய்துவரும் சாதனை
அளவிட முடியாதது.
உங்கள் கவிதை
தமிழில் எழுதப்படும்
நவீன உலகின் இலக்கிய நாட்குறிப்பு.
உங்கள் பார்வையில் படும் ஒவ்வொரு மனிதனையும்
ஒவ்வொரு சம்பவத்தையும்
அது வார்த்தை கொண்டு
வரைகிறது.
போரை புயலை
போராட்டத்தை
துப்பாக்கிச் சூட்டை
மக்கள் அவலத்தை
மானுடத் துயரத்தை
என
இந்த நூற்றாண்டின் ஒவ்வொரு நாளையும் அது
பதிவு செய்கிறது.
உங்கள் கவிதைகளை ஒட்டுமொத்தமாக தொகுத்தால் அது
நாம் வாழும் காலத்தின்
நவீன காவியம்.
நவீன மனிதனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
அது பாடுகிறது.
அவனது
அன்பையும் வெறுப்பையும் அது இசைக்கிறது
அவனது புன்னகையிலும் கண்ணீரிலும் அது கருக்கொண்டு உள்ளது.
அவனது வாழ்வின் வேரையும் மலரையும்
அது வரைகிறது.
ஆனால்
காதலை எழுதும் போது
அதிலிருந்து ஏன்
கண்ணீர் துளிகள் உதிர்கின்றன?
சில நேரம் உதிரத் துளிகளும்.
அன்புக்காக ஏங்கும்
உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது
அன்பே என்று உங்களை
எத்தனை இதயங்கள் உங்களை அழைக்கின்றன
தெரியுமா?
அடம்பிடிக்கும் குழந்தையை
அம்மா தூக்கிக் கொஞ்சினால் போதும்
அது அழுகையை நிறுத்துமே.
அவள் ஏன் இப்படிப் பாராமுகம் காட்டுகிறாள் ?
கடவுளின் குழந்தைகள்
கடக்க வேண்டிய
வலியின் பாதைதான்
கலைஞனின் பாதை.
அந்த வலிதான்
அவனது கச்சாப்பொருள்.
அங்கிருந்துதான் அவனது கலை ஊற்றெடுக்கிறது.
காயங்கள் பொறுக்காமல் அலறுகிறான் கலைஞன்.
ஆனால் அந்த அலறலில் ராகங்கள் பிறக்கின்றன.
உலகம் அதை ரசிக்கத் தொடங்கிவிடுகிறது
அவன் வலிகளை ஆற்ற முனையாமல்
அவனைச் சமாதானப் படுத்தாமல்.
அதைக் கலைஞனும் ரசிக்கிறான்.
கலை நின்றுபோய்
வாழ்வில் சுகம் காண்பது
தாங்கிக்கொள்ள முடியாத துயரம் அல்லவா?
அந்த வலியைத் தாங்குவதும்
இந்த ரசனையைக் காண்பதுவும்
அவனை மட்டில்லாமல் மகிழ்விக்கிறது.
இலக்கியத்தில்
இதழியலியில்
அரசியலில்
எனத் துறைதோறும்
நீங்கள் செய்துவரும் சாதனை
அசுர சாதனை.
வாழும் ஒவ்வொரு மனிதருக்கும்
உங்கள் வாழ்க்கை ஒரு உந்துசக்தி.
ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியை அது தருகிறது.
உங்கள் தன்னம்பிக்கையால் நீங்கள் அடைந்த உயரம்
வியப்பூட்டுகிறது.
என் ஆச்சரியக்குறியின்
உயரம்
ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது.
உங்கள் உயரத்துக்கான நாற்காலி
இதுவரை செய்யப்படவில்லை.
ஆனால் அது கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை.
அன்பு நிறையட்டும் உங்கள் நாட்கள் எல்லாம்.
காலம் உங்கள் கரங்களில் கொடுக்கட்டும்
உங்கள் தீரா எழுத்துக்கான பரிசை.
உங்கள் கோப்பையில் நிரையட்டும்
தீராத தாகத்தைத் தீர்க்கும் பானம்.
கூடவே ஆறாத காயங்களை ஆற்றும் மருந்தும்.
*
பிருந்தா சாரதி
*
Comments