டி.எம்.செளந்திரராஜன் 100வது பிறந்த நாள் இன்று
டி.எம்.செளந்திரராஜன் 100வது பிறந்த நாள்
பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்
கடந்த 1922 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி மதுரையில் சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்தவர் டி எம் சௌந்தரராஜன். இவர் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களை பாடியுள்ளார் என்பதும் அவரது ஒவ்வொரு பாடலும் இன்றும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று டி எம் சௌந்தரராஜன் 100வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
TMS திரை இசைத் திலகத்திற்கு இன்று நூற்றாண்டு.
மதுரை சௌராஷ்டிரம் தந்த மகத்தான இசை பிரவாகம்.
மூன்று தலைமுறைகள் தாண்டி, மூப்பில்லாத பாடிய முத்தமிழ்!
ஆரம்பகாலத்தில் டிஎம்எஸ், எம்.கே.தியாகராஜ பாகவதர் போன்றே பாட விரும்பினார். தன்னுடைய பாடலை கேட்டால் அது பாகவதர் பாடியது போல இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
அவருடைய எதிரொலியாக அன்று நான் இருந்தேன் என டிஎம்எஸ் குறிப்பிட்டுள்ளார். அவர் பாடிய முதல் பாடலான ராதே என்னை விட்டு ஓடாதடி... ஏற்கனவே சிந்தாமணி படத்தில் பாகவதர் பாடியது.
அதே பாடலை பாடச் சொன்னதும் டிஎம்எஸ் குஷியாகிவிட்டார். அந்தப் பாடல் கேட்பதற்கு பாகவதர் பாடியது போன்றே மயக்கத்தை தரும். எந்த குரலுக்கும் தகுந்தபடி பாடுகிற திறமை டிஎம்எஸ்ஸுக்கு பிறவியிலேயே இருந்தது. அதனால் தான் சிவாஜி, எம்ஜிஆர் என யாருக்கு அவர் பாடினாலும், அது அந்த நடிகரே பாடியது போல் தோன்றும். அது டிஎம்எஸ்ஸுக்கே பிறவியிலேயே அமைந்த வரம்.
டிஎம்எஸை அசைக்க முடியாத ஜாம்பவனாக்கிய படம் தூக்கு தூக்கி. சிவாஜி கணேசன் நடித்தது. ஆர்.எம்.கிருஷ்ணசுவாமி இயக்கிய இந்தப் படத்தை அருணா பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன் தயாரித்திருந்தார். ஜி.ராமநாதன் இசை. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் அப்போதைய பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமன் பாடுவதாக இருந்தது. அவர் கேட்ட பணம் அதிகமாக இருக்க, அவருக்குப் பதில் டிஎம்எஸ்ஸை வைத்து பாடல்களை பதிவு செய்வது என முடிவு செய்தனர். இதைக் கேள்விப்பட்டதும் சிவாஜி கணேசன், சி.எஸ்.ஜெயராமனே பாடட்டும், அவர் நல்ல பாடகராயிட்டே என்று கூறியிருக்கிறார்.
டிஎம்எஸ்ஸின் சினிமா பங்களிப்புக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல அவரது பக்தி பாடல்களின் பங்களிப்பு. சுமார் 2500 பக்தி பாடல்களை அவர் பாடியுள்ளார். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்..., உள்ளம் உருகுதய்யா முருகா... சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா... போன்ற முருகனை உருகிப்பாடும் பாடல்களை அவரே இசையமைத்துப் பாடினார். இன்றும் என்றும் இந்தப் பாடல்கள் காற்றில் நிறைந்து முருகன் புகழைப் பாடிக் கொண்டிருக்கும்.
உச்சஸ்தாயியில் பாடுவது அத்தனை எளிதல்ல. அந்த இசையின் சிகரங்களில் நர்த்தனம் ஆடிய குரல் டிஎம்எஸ்ஸினுடையது. அதுபோன்ற சிங்கக் குரலை தமிழகம் இதுவரை கேட்டதில்லை. இனி கேட்பதும் அரிதிலும் அரிது.
Comments