பேரறிஞர் அண்ணா.. நினைவு நாள்

 பேரறிஞர் அண்ணா.. நினைவு நாள்

--



இவரது அரசியல் வாழ்வு அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. ஆனால் தமிழ் திரையுலகில் அண்ணா செய்த சீர்திருத்தம் அளப்பரியது.


இன்றைய தலைமுறையினருக்கு அது அதிகமாக தெரிய வாய்ப்பில்லை.. அதற்கான ஒரு சின்ன பதிவுதான் இது.. மீள் பதிவாக இருந்தாலும், நினைவூட்டலுக்காகவே இதை பதிவிட ஆசைப்படுகிறேன்..!  


நிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளையும், போலி சாமியார்களின் மோசடிகளையும் சித்தரித்த படம் தான் "வேலைக்காரி".


இந்த படத்தின் ஹீரோ, ஒரு தீவிரமான கடவுள் பக்தன்..  ஆனால் ஊருக்குள் அநியாயம், அக்கிரமம் செய்து கொண்டிருக்கும் பண்ணையாரை, கடவுள் கடைசிவரை தண்டிக்கவே மாட்டார்.. 


இதனால்,  விழிப்படைந்த ஹீரோ,  டக்கென நாத்திகனாக மாறிவிடுவார்.. இந்த கிளைமாக்ஸை  பார்த்து அப்போதைய ரசிகர்கள்,  தியேட்டரில் அதிர்ந்துபோய் உட்கார்ந்து விட்டார்களாம்..!


இந்த படத்தில்தான் முதன்முதலில் கோர்ட் சீன் என்பதே இடம்பெற்றது. 


ஒரே இரவில் 300 பக்கங்களை கொண்டு எழுதிய படம்தான் "ஓர் இரவு".. பணக்காரர்களின் களியாட்டங்களையும், அவர்களின் அகவாழ்வில் படிந்துபோன அழுக்குகளையும் நார் நாராக கிழித்தெறிந்த படம்..!


இந்த படத்தில்தான் முதன்முதலில் பிளாஷ்பேக் சீன்கள் இடம்பெற்றன.


சாதியத்திற்கு எதிராகவும் சாட்டையை சுழற்றியவர் அண்ணா.. "காதல் ஜோதி" என்று ஒரு படம்..! 


இதில், என்னை பாதித்த ஒரே ஒரு காட்சியின் வசனத்தை மட்டும் இங்கே உதாரணமாக குறிப்பிடுகிறேன்.. இன்றைய பிள்ளைகளுக்கு இதுவே போதுமானது என்றும் நினைக்கிறேன்::


"ஏ, காளி.. உன்னையே நம்பி தவம் கிடந்த என்னை கைவிடலாமா? மனிதர் கைவிட்டாலும் மாதா காப்பாற்றுவாள் என்று இருந்த என்னை இக்கதிக்கு ஆளாக்கலாமா? 


எவனுடைய சதியால் - வஞ்சனையால் - என் குடும்பம் நாசமாயிற்றோ, அவனுக்கா நீ அருள் புரிவது? இது முறையா? 


தாயே.. இதோ பார் என்னை..! ஏழையை பார்..!


 உழைத்து உழைத்து உருக்குலைந்து போன என்னை பார்!! 


உன்னையன்றி வேறு கதியில்லை என்று நம்பி மோசம் போன என்னை பார்!!


"ஆயிரம் கண்ணுடையாள்" என்று அர்ச்சிக்கிறார்களே உன்னை.. அதில் ஒரு கண்ணால் பார்க்கக்கூடாதா இந்த ஏழை படும் அவதியை? 


உன்னை பக்தியோடு பூஜித்தால் பலன் உண்டு என்று சொன்னார்களே, நான் பூஜித்து கண்ட பலன் என்ன? 


என் கால் வலிக்க உன் கோயிலை சுற்றினேன்.. என் வாய் வலிக்க உன் நாமத்தை பூஜித்தேன்.. மாதாவே,., மாகாளி.. மகேஸ்வரி.. லோகநாயகி என்று பக்தியோடு வேண்டினேன்..!


வாழ வழியின்றி திகைத்தேன்.. கடன் பட்டேன்.. கல்லுடைத்தேன்.. மூட்டை சுமந்தேன்.. வண்டி இழுத்தேன்.. நான் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் சுகவாழ்விற்கா செலவழித்தேன்? 


இல்லவே இல்லை.. சூடம் வாங்கினேன்.. மாலையிட்டேன்.. உனக்கு படையல் படைத்தேன்.. என் பக்தியில் என்ன தவறு கண்டாய் சொல்.. 


சகலருக்கும் நீ தாய் தானே? ஏன் உனக்கு இந்த ஓர வஞ்சனை?


என்னை போன்ற ஏழைகளை ஏன் இப்படி துடிக்க செய்கிறாய்? ஏன் பல கோடி மக்களை வதைக்க செய்து, சிலரை மட்டும் சீராட்டி வைக்கிறாய்?


கள்ளம் கபடமற்றவர்களை அனலில் புழுபோல துடிக்க வைத்து, சூது, வஞ்சனை, சதி செய்யும் சண்டாளர்களை ஏன் விட்டு வைக்கிறாய்?"... 


... என்று  இப்படி அந்த டயலாக் நீண்டு கொண்டே போகும்!  


அண்ணாவின்,  இடிமுழக்கம் போல ஒலித்த இப்படிப்பட்ட அனல் கக்கும் வசனங்களை கண்டு தமிழக மக்கள் மலைத்து போனார்கள்.. அனைத்துமே, மின்னல் கீற்றாய் அவர்களது சிந்தனையில் ஒளியை பாய்ச்சியது..!!


வெள்ளித்திரையில் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் இழைத்து விடிவெள்ளியாய் முளைத்த,  முதல் புரட்சியாளர்தான் நம் பேரறிஞர் அண்ணா..!

பகிர்வு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி