பரமு என்கிற பரமேஸ்வரி எட்டாம் வகுப்பு. ... #சிறுகதை./எழுத்தாளர் இளங்கோவன்
பரமு என்கிற பரமேஸ்வரி எட்டாம் வகுப்பு. ... #சிறுகதை.
பூங்குளம் கிராமம்... அந்த கிராமத்தில் குளம் இருக்கா? அதில் பூக்கள் இருக்கா? னு தெரியல... ஆனால் பூங்குளம் கிராமத்தின் பெயர் ஆலங்காயம் - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். விவசாய வேலைகளில் மக்கள் மூழ்கியே இருப்பதால், படிப்பறிவு குறைவே. இருந்தாலும், கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.
கைநாட்டு கைலாசம் என கிராமமே அழைக்கின்ற கைலாசம், ஒன்னாம் கிளாஸ் கூட போகல, ஆனால், சாகக்கிடக்கிற ஒன்னுவிட்ட அத்தைக்காரி எட்டாவது படிச்ச தன் பொண்ணை கைலாசத்துக்கு கட்டி வச்சிட்டு, தம்பி மகனுக்கு பொண்ணை கொடுத்துட்டோம் இனி கவலையில்லை னு கண்ணை மூடிட்டாள்.
மசக்கையான கைலாசம் பொண்டாட்டி, வாக்கப்பட்ட பூங்குளத்தில், எட்டாவது படிச்ச படிப்பாளி னு பெயர் பெற்றவள். பிரசவம் பார்த்த உள்ளூர்க்கிழவி, டேய்...கைலாசம் உனக்கு பொம்பள பொண்ணு பிறந்திருக்காடா என கத்தி கொண்டாடினாள். கிராமமே கள்ளிப்பாலை ஊத்தி சிசுக்களை சாகடிச்ச காலம் போயிடுச்சின்னு மகிழ்ந்தன.
"யோவ்..மாமா... பொண்ணு பொறந்திருக்கா, அவளையாச்சும் படிக்க வைக்கனும்யா" என கைலாசம் பொண்டாட்டி பரமேஸ்வரி சொன்னதும், "ஆகட்டும்...பரமு" என்றான்.
"யோவ்...மாமா... பாப்பாவுக்கு எதிர்ல நீ கைநாட்டு போடாதே, இன் கையெழுத்து போடுய்யா" என பரமு சொன்னதும், தலையாட்டிட்டே " சரி புள்ளே" எனக் கூறியபடியே வெளியே சென்றான்.
உள்ளே நுழைந்தவன் கையில் ஸ்லேட்டும், பல்ப்பமும் இருப்பதைக் கண்டு, மகிழ்ந்தாள் பரமு.
"அ..ஆ...இ...ஈ... என ஆரம்பித்து, A for apple, B for ball என சொல்லி சொல்லி தமிழும், ஆங்கிலமும் இரண்டும் வெவ்வேறானவை, அதற்கான வித்தியாசத்தை சொல்லி கைலாசத்தை கொஞ்சம் கொஞ்சம் மாற்றத் தொடங்கினாள்.
குழந்தை, தவழ்ந்தது, உருண்டது, கவிழ்ந்தது, நின்றது, நடந்தது, ஓடத்துவங்கியது.... அதற்கேற்றவாறே கைலாசமும், தமிழையும், ஆங்கிலத்தையும் கொஞ்சம், கொஞ்சமா பேசி, படித்து, பழக ஆரம்பித்தான்.
நான்காவது வயதில் குழந்தை பிரதீபாவை பால்வாடியில் சேர்த்தார்கள். பிரிநர்சரி போக ஆரம்பித்த குழந்தை, வீட்டிற்கு வந்ததும், தத்து பித்தென பேசப்பேச, அதற்கேற்றவாறே கணவனும், மனைவியும் பேசிப்பேசி மகிழ்ந்தனர். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என தேறிய படியே வளர்ந்த பிரதீபா வீட்டிலே...மம்மி, டாடீ, என்பாள், அப்பா, அம்மா என்பாள், mood எப்படியோ, அதன்படியே பேசி பேசி கேட்பாள். கையில் கொம்பை வைத்து, what is this? என அப்பனை கேட்டால், கைலாசம் பதில் சொல்லுவான். This is banana... This is mango.
கைலாசத்திற்கோ உள்ளூர மகிழ்ச்சி, எம்பொண்ணு பொறந்த நேரம், நான் படிப்பாளி ஆயிட்டேன், நாலு பேர் சேர்ந்து போனால், நாலெழுத்து தெரிஞ்சவன் கைலாசம் என பேரு பெற்றான்.
" மாமா...மகளை ஆறாவது சேர்க்கனும், மெயின் ரோட்ல இருக்கும் இங்கிலீஸ் ஸ்கூல்ல சேர்க்கலாமா?" என பரமு கேட்டதும், "வேணாம் புள்ள, இங்க புதுசா கவர்மென்ட் பள்ளியே வருதாம், அதில் ஆறாவது சேர்த்துடலாம்" என்றான் கைலாசம்.
"சரி மாமா... உன் இஸ்டம்" என்றாள் பரமு.
உள்ளூரிலே வந்த உயர்நிலைப்பள்ளியில், சேர்ந்த மகள், ஆறாவது, ஏழாவது, எட்டாவது, என தேர்ச்சி அடைய அடைய, கைலாசமும் மகளோட பக்க வீட்டிலே படிச்சி படுச்சி அறிவை வளர்த்தான்.
பிரதீபா, பத்தாவது முடிச்சிட்டு, மெயின்ரோட்ல உள்ள மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தாள், இரண்டு வருடம் கடுமையாக படித்தாள், கைலாசமும் சரி, பரமுவும் சரி மகளுக்கு இணையாக வீட்டிலே படித்தும் வந்தனர்.
நீட் தேர்விலே, தேர்ச்சியடைந்த பிரதீபா, பக்கத்து ஊரிலே புதிதாக வந்த மெடிக்கல் காலேஜ்ல மருத்துவம் எடுத்து படித்தாள்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கைநாட்டு கைலாசம் காம்பவுன்டர் கைலாசம் என கிராமமே கொண்டாடியது.
பரமுவின் கைகளைப் பிடித்த கைலாசம், "புள்ள... நீ மட்டும் அன்னிக்கி, கைநாட்டு போடாதே, கையெழுத்து போடு னு சொல்லாமல் இருந்திருந்தால், என்னால் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது" னு சொல்லி புகழ்ந்தான்.
" மாமா... அன்னிக்கி நீங்க, என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்ததால் தானே, அதனால உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்" என்றாள்.
உள்ளே வந்த டாக்டர் பிரதீபா... மிஸ்டர். கைநாட்டு கைலாசம், இனி நீங்கள் டாக்டரோட அப்பா என பெருமையாக சொல்லி இருவரையும் கட்டிக்கொண்டாள்.
அங்கே ஆண் என்ற ஈகோ, குடும்பத்தலைவன் என்ற ஈகோ, எட்டாவது வரை படித்தவள் என்ற ஈகோ, டாக்டராகிவிட்டோமே என்ற எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் சிறு குழந்தைகள் போல துள்ளி விளையாடியதில் குடும்பத்தின் அழகு பளிச்சென தெரிந்தது.
முற்றும்.
எழுத்தாளர் இளங்கோவன்
சென்னை.
Comments