தேங்காய் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு முறை மதுரை தண்ணி சட்னி

 வீட்டில் தேங்காய் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு முறை மதுரை தண்ணி சட்னி செய்து பாருங்கள்




அனைவரது வீட்டிலும் காலை, மாலை என்றாலே சாப்பிடுவதற்கு இட்லி, தோசை அல்லது சப்பாத்தி, பூரியாகத்தான் இருக்கும். இதனுடன் தொட்டுக்கொள்ள மதியம் சாதத்திற்கு செய்த குழம்பைச் சேர்த்து சாப்பிட முடியாது. இதற்கு தேவையான சைடில் செய்தால் மட்டுமே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் இந்த இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, வெங்காய சட்னி இதுபோன்ற சட்னிகள் தான் அதிக அளவில் செய்வதுண்டு. இதற்காக வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒரு பொருள் தேங்காய். ஆனால் இந்த தேங்காய் இல்லாத நேரத்தில் எப்படி சட்னி செய்வது என்று பலருக்கும் தெரியாது. ஏனென்றால் சட்னி மட்டும்தான் உடனடியாக செய்யக்கூடிய ஒரு உணவுப்பொருள். எனவே தேங்காய் சேர்க்காமல் செய்யக்கூடிய இந்த மதுரை தண்ணீர் சட்னியை ஒருமுறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 2, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 8, காய்ந்த மிளகாய் – 2, பொட்டுக்கடலை – ஒரு கப், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, எண்ணெயில் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.


பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை நன்றாக ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு கப் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 90% பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்

பிறகு மறுபடியும் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வரமிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.


வெங்காயம் எண்ணெயில் நன்றாக சுருண்டு வதங்கியதும், இதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம், பொட்டுகடலை விழுதை சேர்த்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இவை அனைத்தையும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் போதும். சுவையான மதுரை தண்ணி சட்னி தயாராகிவிடும். இதனை இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.




Advertisement








Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி