அறிஞர் அண்ணா

 கா. இராசா மீரா

 இன்று(3.2.2022) அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்...



  அறிஞர் அண்ணா என்று பாசத்துடன் அழைக்கப்படும் அண்ணாதுரை அவர்கள் காஞ்சிபுரத்தில் 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். காஞ்சிபுரத்தில் பள்ளி, இளங்கலை  கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் எம்ஏ பட்டம் பெற்றார்.


 சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.அதுவே பிற்காலத்தில் அவரது பெரும் புலமைக்கு  காரணமாக அமைந்தது. அதனால் அவர் தனது எழுத்து திறமையையும் பேச்சாற்றலையும் நன்கு வளர்த்துக் கொண்டார். சொல் புதிது,சுவை புதிது என்ற சொல் மூலம் அவருடையதனித் திறமையைப் புரிந்து கொள்ளலாம். தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவதில் அவர் வல்லவர்.

 திராவிட நாடு என்ற இதழில் அவர் எழுதிய கதை,கட்டுரை, கடிதம் ஆகியவைகளின் மூலம் சீர்திருத்த கருத்துக்களை எழுதி மக்கள் மனதை கொள்ளை கொண்டார். ரங்கோன் ராதா, கலிங்கராணி, பார்வதி, பி. ஏ,போன்ற புத்தகங்களையும், பணத்தோட்டம், குமரிக்கோட்டம், ஆரியமாயை போன்ற காவியங்களையும் எழுதினார். ஓர் இரவு, வேலைக்காரி, நீதி தேவன் மயக்கம்,சந்திரமோகன், சந்திரோதயம் ஆகிய அவருடைய நாடகங்கள் புரட்சிக் கனல் தெரிபவை களாக விளங்கின.


 தந்தைப்பெரியார் அவர்களுடன் இணைந்து சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டுவந்த அண்ணா அவர்கள் பின்னர் அவரிடமிருந்து  பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை உருவாக்கினார். அவர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், என். வி. நடராஜன், ஈ.வி.கே. சம்பத் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும், எம்.ஜி.ஆர் , எஸ்.எஸ்., ஆர்,போன்ற கலைஞர்களும் அக்கட்சியில் இணைந்து வலு சேர்த்தனர்.


 1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று, அண்ணா அவர்கள் முதலமைச்சர் பதவி ஏற்றார்கள். அவர் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு என்று ரேஷனில் விநியோகம் செய்தார். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பாடத்தை பள்ளியில் இருந்து நீக்கினார். அவர் ஆட்சி காலத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை கோலாகலமாக நடத்தினார். பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வு பிரிவை உருவாக்கினார். அமெரிக்காவில் ஏ ல் பல்கலைக்கழகத்தில்  சொற்பொழிவு ஆற்றி டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.


 தமிழகத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக நல்லாட்சி செய்த அண்ணா அவர்கள் கொடிய புற்றுநோய் காரணமாக 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி இவ் உலகைவிட்டு, தமிழ் நெஞ்சங்களை விட்டு மறைந்தார்.


 இன்று அவரது நினைவு நாள். அவர் பூத உடல் மறைந்தாலும், அவர் வான்புகழ் என்றும் தழைக்க நாம் இன் நாளை  நினைவுகூர்ந்து போற்றுவோம்

கா. இராசா மீரா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி