கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் காமாட்சி சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 94.
சென்னை பெசண்ட் நகர் 174ஆவது வார்டுக்கு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் காமாட்சி சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 94.
பெசண்ட் நகர் பகுதியில் பல பொதுப் பிரச்சினைகளுக்கு தனி நபராக போராடி சாதித்துவரும் சமூகப் போராளியான இவரின் பேட்டி மூலம் இவரை முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக உதாரண மனுஷியாக உணரமுடிகிறது.
"எனக்கு வயது 94 என்று நான் நினைத்துப் பார்ப்பதே இல்லை. நாம் வாழும் தெரு, பகுதி பற்றி நமக்கு ஒரு பொறுப்பும் மதிப்பும் வேண்டும். இது என் பகுதி என்கிற உரிமை மனதில் இருந்தால் அக்கறை தானாக வரும். எனது பகுதியில் எப்போது சாலை போடப்பட்டாலும் தினமும் நான் சென்று அருகில் நிற்பேன். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு போடப்படுகிறதா என்று விடாமல் கண்காணிப்பேன். காண்ட்ராக்டர் தவறு செய்ய வாய்ப்பே இல்லாமல் கேள்விகள் கேட்பேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் என் சமூகப் பணிகள் தொடரும்''
பெசண்ட் நகர் கடற்கரையில் பாழடைந்து கிடந்த கார்ல் ஸ்மித் நினைவுச் சின்னத்தைப் புதுப்பிக்க இடைவிடாத முயற்சிகள் எடுத்து சாதித்தவர் இவரே.
ஓல்காட் நினைவுப் பூங்காவில் சுற்றுச் சுவர் இல்லாததால் பல அத்துமீறல்களும், மரங்கள் வெட்டுதலும் நிகழ்ந்தன. அதற்கும் விடாமல் போராடி சுற்றுச் சுவர் எழுப்ப வைத்திருக்கிறார்.
அதிகாரத்தில் இல்லாமலேயே இந்த வயதில் இத்தனை சாதிக்கும் இவரிடம் அதிகாரம் இருந்தால் எப்படி செயல்படுவார் என்று இந்தப் பகுதி வாக்காளர்கள் நினைத்துப்பார்த்து வாக்களிப்பார்களா?
இவரைப்போல இந்த வார்டில் இதைச் செய்திருக்கிறேன் என்கிற பட்டியலுடன் எத்தனை வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் கட்சிகள் சார்பில் போட்டியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
கொசு மருந்து அடிக்கும், பிளீச்சிங் பவுடர் போடும் கார்ப்பரேஷன் ஊழியர்கள்கூட அவ்வப்போது வந்து கையெழுத்து வாங்கிச் செல்கிறார்கள்.
ஆனால் வெகு சிலரைத் தவிர கவுன்சிலர்களில் எத்தனை பேர் தங்கள் வார்டில் உள்ள மக்களுக்கு பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பெரிய கேள்வி.
காமாட்சி அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தக் குறிப்பிட்ட வார்டின் தேர்தல் முடிவை அறிய நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்
நன்றி
திரு பட்டுக்கோட்டை பிரபாகர்
அவர்களின் பேஸ்புக் பதிவு இது
Comments