FROZEN MUSIC தியாகராஜ பாகவதர்
அழகான கட்டடத்தை FROZEN MUSIC என்பார்கள்
. எது ஒன்று அழகாக இருந்தாலும் அதை இசையாய்ப் பார்ப்பவர்கள் நாம். திருச்சியிலோ ஓர் அழகே இசையாகவும் இருந்தது. அவர்தான் தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். அழகனான எம்.ஜி.ஆர் வியந்த அழகன் அவர். 'நடிகன் குரல்' பத்திரிகையில் எம்.ஜி.ஆர் சொன்னார், “எத்தனை விளக்குகள் எரிந்தாலும் பாகவதர் ஒரு இடத்தை விட்டுச் சென்றுவிட்டால் அந்த இடத்தை இருள் கவ்விக்கொள்ளும். அவரைச்சுற்றி ஒரு ஒளி எப்போதும் இருக்கும்” என்று.
இசையை ரசிக்காத 23-ம் புலிகேசி மாதிரி ஒரு மன்னனிடம் ஒரு கவிஞன் சொன்னான், ’மன்னா, உங்கள் இதயத்தை எந்த எதிரியின் வாளாலும் துளைக்கமுடியாது’ என்று. ’ஏன்’ என்றான் மன்னன். கவிஞன் சொன்னான், ’இசையாலேயே துளைக்க முடியாத உங்கள் இதயத்தை வாளாலா துளைக்க முடியும்’ என்று.
உண்மைதான். இசை மென்மையானது, வலிமையானது, கூர்மையானது. அதனால்தான் பாரதிதாசன் “தெள்ளு தமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் யாம் யாம்” என்று துள்ளினார்.
இப்படியான ’இசைத் தமிழில்’ அதிக மக்களால் ரசித்தும் ருசித்தும் கேட்கப்படுவது திரை இசைப் பாடல்கள்தான். ஒருவகையில் இசையை, அதன் கடுமையான இலக்கண மரபிலிருந்து விடுவித்து; ஜனாயகப்படுத்தியதும் திரையிசைதான்.
இன்று இசை கேட்பதற்கு விதவிதமான கருவிகள் வந்துவிட்டன. ஒருகாலத்தில் ரேடியோ, சினிமா, இசைத்தட்டு மூன்றும்தான். டேப்ரெக்கார்டர் பின்னால் வந்து சேர்ந்தது. எத்தனை கருவிகள் வந்தாலும் பாட்டும் இசையும்தான் அடிப்படை. அதுவும் பாடும் குரலில் வழியும் தேன் நம்மை மயங்கடிக்கும். விதவிதமான குரலழகால் மனமும் காற்றும் நிரம்பி வழியும். அப்படியான ஒரு குரல்தான் பாகவதரின் குரல். “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று அவர் பாடினால் அவர் ராதைக்கு மட்டுமல்ல, எந்த ராதைக்கும் கோபம் தணியும்.
“மன்மதலீலையை வென்றார் உண்டோ” என்று ஒரு சாதாரண தொழிலாளி சுத்த சங்கீதத்தில் பாடுகிறான். சாஸ்திர சங்கீதம் எளியவர்களுக்குப் புரியாது என்ற பிம்பத்தை உடைத்தது அது. பிரச்னை சங்கீதத்தில் இல்லை, பாடும் முறையிலும் குரல் வளத்திலும் உள்ளது என்பதை மரபான சங்கீத உலகை ஏற்கவைத்தார் பாகவதர். அதனால்தான், சங்கீத விமர்சனத்தைக்கூட எல்லோரையும் படிக்கவைத்த எழுத்தாளர் கல்கி, பாகவதரின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, “இந்தக் குரலையும் பாட்டையும் கேட்டுவிட்டு, வேறு பாட்டைக் கேட்டுக் காதைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது” என்று சபாவை விட்டுப் போய்விட்டாராம். ஒரு நல்ல காபியைக் குடித்துவிட்டால் வேறு காபி குடிக்க மனசு வராதல்லவா, அப்படி இது.
ஒரு முப்பது ஆண்டுகள் தன் குரலால் தமிழ்நாட்டைக் கட்டிப்போட்டு மயக்கிய பாகவதர் 'திருச்சியின் மகன்' என்பது நம் ஊரின் பெருமைதான்
நன்றி: விகடன்
Comments