மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோள்: வாரியத்திற்கு குறை தீர்ப்பாளர் அறிவுரை
மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோள்: வாரியத்திற்கு குறை தீர்ப்பாளர் அறிவுரை
----------------*-----------------*------------------*---------------
மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோளாக இருக்க வேண்டும்' என மின் குறைதீர்ப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஆலந்துாரைச் சேர்ந்த பெனாசிர் அலி என்பவர் கொரோனா காலமான 2020 ஏப்ரல் மே மாதங்களில் கடை மூடப்பட்டிருந்த போது மின் கட்டணம் அதிகம் வந்துள்ளதாக ஆலந்துார் உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மீட்டர் சோதனை முடிந்த பின் மின் கட்டணம் செலுத்துமாறு பொறியாளர் தெரிவித்துள்ளார். மூன்று மாத தவணை அபராத தொகையுடன் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தியுள்ளார்.தான் அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீட்டர் ஆய்வு செய்யப்படாததால் அவர் சென்னை தெற்கு மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்துள்ளார்.
அங்கு அளித்த தீர்ப்பால் அதிருப்தியடைந்த அவர் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறைதீர்ப்பாளரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கு மின் வாரியம் பதில் மனு செய்துள்ளது.
இரு தரப்பு வாதங்களை விசாரித்த பின் மின் குறை தீர்ப்பாளர் தேவராஜன் அளித்த உத்தரவு விபரம்:
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படியும் அரசின் வழிகாட்டுதல் படியும் மேல்முறையீட்டாளரின் மின் இணைப்பில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதில் விதிமீறல் ஏதுமில்லை.புகார் தெரிவித்தும் மீட்டரில் குறைபாடு இல்லை என்பதற்கு ஆதார சோதனை அறிக்கையுடன் பதில் அளிக்காதது மின் வாரியத்தின் சேவை குறைபாடு.மேலும் மின் ஊழியர் மீட்டர் சோதனை அறிக்கை வரும் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டாமென தெரிவித்தது தவறான வழிகாட்டுதல்.இதன் விளைவாகவே கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தவில்லை எனவும் அதனால் தாமத மற்றும் மறு இணைப்பு கட்டணம் செலுத்த நேரிட்டதாக அறிய முடிகிறது.
மின் நுகர்வோரிடம் காட்டும் மின் வாரியத்தின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. நுகர்வோரின் திருப்தியே மின் வாரியத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments