பி.ஆர்.தேவர்
ஜவஹர்லால் நேரு
பி. ரத்தினவேலு தேவரைச் சந்திக்க இரண்டுமுறை அவர் வீட்டுக்கே வந்தார். 1936-ல் 'தேவர் விலாஸ்' வீட்டில்தான் நேரு தலைவாழை விருந்தைத் தரையில் அமர்ந்து சாப்பிட்டார். நேரு தரையில் உட்கார்ந்தது பி.ஆர்.தேவருக்குத் தந்த மரியாதையாகப் பார்க்கப்பட்டது. உலகின் தலைசிறந்த புத்தகங்களில் இரண்டை எழுதிய நேருவே பாராட்டும் அளவுக்கு அவரிடம் மிகப்பெரிய நூலகம் இருந்தது. அவற்றில் சில நூல்களை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. ஆங்கில இலக்கியத்தின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகம். அதைவிட விளையாட்டென்றால் அவருக்கு உயிர். விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒழுங்கை விளையாட்டுதான் கற்றுத்தரும் என்பது அவர் கட்சி. ஏராளமான விளையாட்டுப் புத்தகங்களைத் தன் சேகரிப்பில் வைத்திருந்தார். குறிப்பாக கிரிக்கெட் புத்தகங்கள் அவரிடம் அதிகம். புதிதாக வரும் புத்தகங்களை உடனே தனக்கு அனுப்புவதற்கு ஹிக்கின் பாதம்ஸோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டவர் பி.ஆர்.தேவர். தான் படித்து முடித்த புத்தகங்களில் தேதியைக் குறித்துவைக்கும் பழக்கமும் அவரிடமிருந்தது.
நேரு வருகையின்போது
இப்போது டவுன்ஹால் என்று அழைக்கப்படும் ராணி மங்கம்மாள் தர்பார் ஹாலில்தான் நேருவுக்கு வரவேற்பு விழா நடந்தது. நேரு பி.ஆர்.தேவரைப் பாராட்டிப்பேசியதைத் தீரர் சத்தியமூர்த்தி மொழிபெயர்த்தார்.
1937-ல் பி.ஆர்.தேவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ராஜாஜி அமைச்சரவை அமைத்தார். ராஜாஜி அமைச்சர் பதவிக்கு அழைத்தும், சுதந்திரமாய் வேலைசெய்ய முடியாது என்பதால் மறுத்துவிட்டார். அதன்பிறகே TSS ராஐன் அமைச்சரானார். நகரசபைத் தலைவருக்குத் தரப்பட்டுவந்த வாகன அலவன்ஸ் 125 ரூபாயைக்கூட வேண்டாம் என்றவர் அவர்.
முதுகுளத்தூர் கலவரம் தமிழ்நாட்டு அரசியலில் மாறாத வடு. நட்போடு இருந்த காமராஜரையும் முத்துராமலிங்கத் தேவரையும் அந்தக் கலவரம் அரசியலில் பிரித்துவிட்டது. பி.ஆர்.தேவர் காமராஜரின் தலைமையை ஏற்றவர். இந்தச் சூழ்நிலையில் முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது தங்கியது பி.ஆர்.தேவரின் வீட்டில்தான். அதுவும் ஓய்வுக்காகவும் சிகிச்சைக்காகவும் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். பி.ஆர்.தேவர் மறைவுக்குப் பிறகும் நட்பைப் பேணும் குடும்பமாக அவரது குடும்பம் இருந்ததை பார்க்கமுடிகிறது.
காந்தியடிகளுக்கு திருச்சி நகரமன்றத்தின் சார்பில் புத்தாரில் பிரமாண்ட வரவேற்பை பி.ஆர்.தேவர் கொடுத்தார். அந்தக் காலத்தில் இது ஒரு புரட்சியாகப் பார்க்கப்பட்டது. தான் அணிந்திருந்த விலை உயர்ந்த மூன்று கற்கள் பதித்த மோதிரத்தை காந்தி திரட்டிய ஹரிஜன சேவை நிதிக்கு பி.ஆர்.தேவர் வழங்கினார். அவரின் உடல்நலமில்லாத ஒரே மகள் பாப்பம்மாவுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு அவர்மீது காந்தி மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார்.
காந்தியடிகளின் கட்டளையை ஏற்று 1940-ல் 'தனிநபர் சத்தியாகிரகத்தில்' பங்கேற்ற பி.ஆர்.தேவர் ஒரு ஆண்டு திருச்சி சிறையில் இருந்தார். அப்போது அவர் எம்.எல்.ஏ ஆகவும் ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தார் என்பது முக்கியமானது. சிறைக்குக் கிளம்பும் போதும் தன் தாய் வள்ளியம்மாளின் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றார். அந்த வீரத் தாயும் தன் மகனைச் சிறைக்கு மகிழ்வோடே அனுப்பிவைத்தார்.
நன்றி: விகடன்
Comments