தேவிகா வாழ்க்கையில்

 தேவிகா வாழ்க்கையில் விளையாடிய ஊரடங்கு




🔥
இந்தியில் வைஜயந்திமாலா துவம்சம் செய்த ஸிந்தகி படத்தை தமிழிலும் எடுக்க விரும்பினார் ஜெமினி அதிபரான, சினிமா ஜாம்பவான் எஸ் எஸ் வாசன்.
இதன்படி தயாராகி 1965-ல் வெளியானதுதான், வாழ்க்கை படகு என்ற அற்புதமான திரைப்படம்.
ஏழைப் பெண்ணான தேவிகா, படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால் குடும்பத்தின் வறுமையை போக்க தாயின் எதிர்ப்பையும் மீறி நாடகத்தில் நடிக்க ஆரம்பிப்பார். அவருக்கு வாய்ப்பு தந்து உதவுவார், நாடக இயக்குனரான முத்துராமன்.
நாட்டியமும் நடிப்புத்திறமையும் ஒருங்கே பெற்ற தேவிகாவின் அழகில் முத்துராமன் மயங்கி விடுவார்.. இருப்பினும் காதலை வெளியே சொல்ல மாட்டார். முத்துராமனை தன் குருவாக பூஜிப்பார் தேவிகா.
நாடகம் நடக்கும் தியேட்டரின் அதிபரான பாலாஜிக்கு, தேவிகாவை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி.. இதற்காக ஆர்.எஸ் மனோகர் தலைமையிலான தனது அடியாட்களை வைத்து தேவிகாவை காரில் கடத்துவார் அவர்.
அப்போது வழியில் தனது நாயுடன் வரும் ஜமீன்தார் பரம்பரையான ஜெமினி கணேசன், தேவிகாவை காப்பாற்றுவார்.
இருவருக்கும் இடையே காதல் மலர ஆரம்பித்து விடும். தான் பெரிய ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர் என்ற விஷயத்தை தேவிகாவிடம் சொல்லவே மாட்டார் ஜெமினி.
ஒருகட்டத்தில் நாடக இயக்குனரான முத்துராமன், தனது காதலை அடக்க முடியாமல் சொல்லிவிடுவதற்காக தேவிகா அறைக்கு முத்துராமன் செல்வார்.
ஆனால் அங்கு தேவிகாவோ ஜெமினியோடு காதல் செய்து்கொண்டிருப்பார். இதனை கண்டதும் விஷயத்தைப் புரிந்துகொண்டு தனது காதலைப் புதைத்துக்கொண்டு அத்துடன் திரும்பி விடுவார் முத்துராமன்.
பெரிய ஜமீன்தாரான தந்தை எஸ்வி ரங்காராவிடம் தனது காதலைச் சொல்லி திருமணத்திற்கு அனுமதி கேட்பார் ஜெமினி. ஆனால் அவரோ ஒரு நாடகக்காரியை தனது மருமகளாக அனுமதிக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லி விடுவார்.
இருப்பினும் தனது காதலியை ஒரு முறையாவது நேரில் சந்தித்து பார்த்து குணநலன்களை அறிந்த பிறகு முடிவை எடுக்குமாறு தந்தையிடம் வற்புறுத்துவார் ஜெமினி. அதற்கு ரங்காராவும் ஒத்துக்கொள்வார்.
இதன் பின்னர் தேவிகாவின் நாடகத்தை காண வழக்கம்போல ஜெமினி செல்வார். அவருக்குத் தெரியாமல் பின்னாலேயே தொடர்ந்து ரங்காராவும் சென்று நாடகத்தை பார்ப்பார்.
நாடகம் முடிந்ததும் தேவிகாவை சந்திப்பார் ஜெமினி. தனது தந்தையிடம் நாளை அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்புவார். ஜெமினி போனதும் இயக்குனரின் ரூமுக்கு நன்றி தெரிவிக்க தேவிகா செல்வார்.
அப்போது மறைந்து இருந்து இந்த காட்சியை பார்க்கும் ஜமீன்தாரை, ஆள் யார் என தெரியாமலேயே அங்கிருக்கும் வேலையாள் பார்த்துவிட்டு திட்டுவார் . ‘’யோவ் அந்த நடிகைகருக்கும் இயக்குநருக்கும் இடையே ஆயிரம் விஷயம் இருக்கும். இதையெல்லாமா ஒளிஞ்சிருந்து பார்ப்பது'' என்று சொல்லி ரங்காராவை விரட்டுவான் அந்த வேலைக்காரன்.
தனது மகனின் காதலிக்கும் இயக்குனருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற தீர்மானத்திற்கு வருவார் ரங்காராவ்.
மறுநாள் தன் காதலனோடு அவன் வீட்டுக்கு சென்ற பிறகுதான், தன் காதலன் ஒரு ஜமீன்தார் என்பதே தேவிகாவுக்கு தெரியவரும்.
தன் மகனோடு வந்திருக்கும் தேவிகாவை தனியே சந்தித்துப் பேசும் ஜமீன்தார் ரங்காராவ். அந்தஸ்து பேதம் சொல்லியும் நடத்தையை காரணம் காட்டியும் வார்த்தைகளால் சுட்டெரிப்பார்..
காதலை தியாகம் செய்ய என்ன விலை என்று கேட்டுக் கொண்டே போய், மூட்டை மூட்டையாய் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப்பார்ப்பார்.. ஆனால் அங்கே தேவிகா இருக்க மாட்டார் .
தந்தையால் தனது காதலி அவமானப்படுத்தப்பட்டதை தெரிந்துகொண்ட ஜெமினி, உடனே தேவிகாவின் வீட்டுக்குச் செல்வார். அங்கு தன்னை மறந்து விடும்படி தேவிகா சொல்வார்.
வாழ்ந்தால் இருவரும் சேர்ந்து வாழ்வோம் இல்லையேல் இருவருமே சேர்ந்து மடிவோம் என்று ஜெமினி கூறிவிட்டு அவரைஅழைத்துக்கொண்டு தந்தையிடம் வருவார்..
காதலுக்காக ஜமீந்தார் வாழ்க்கையைத் துறந்து விட்டு காதலியுடன் வீட்டைவிட்டு வெளியேறுவதாக மகன் சொன்னதும், துடித்துப் போவர் ரங்காராவ். வேறு வழியின்றி திருமண்த்திற்கு சம்மதிப்பார்.
இருப்பினும் தேவிகாவும் முத்துராமனுக்கும் இடையே உள்ள ‘நெருக்கம்’ ரங்காராவை உறுத்திக்கொண்டே இருக்கும். அதனடிப்படையில் ஒரு வாக்குறுதி கேட்பார். இனி வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும் அந்த இயக்குனரை சந்திக்கவே கூடாது என்று தேவிகாவை சத்தியம் செய்யச் சொல்வார்.
தன் காதலியின் கற்பை பற்றி சந்தேகிப்பதாக ஜெமினி கொதித்து போவார். ஆனால் தேவிகா கோபப்படாமல், அவரை சாந்தப்படுத்தி விட்டு வாக்குறுதியை தருவார்.
திருமணம் நடந்து தேவிகா ஏழுமாத கர்ப்பிணியாக உள்ளநிலையில் கணவர் ஜெமினியுடன் ஒரு நாள் மாலை தேவிகா வெளியே செல்வார்.
நடுவில் கார் பழுதானதால் மெக்கானிக்கை கூட்டிவர ஜெமினி கணேசன் வெளியே சென்ற நிலையில் அங்கு தொழிலாளர் பேரணி நடக்கும். கலவரம் வெடிக்கும். அந்த சமயம் பார்த்து அங்கிருக்கும் வில்லன் பாலாஜியின் ஆட்கள் தனியாக இருக்கும் தேவிகாவை கடத்த முயற்சிப்பார்கள்..
அவர்களிடம் தப்பிக்க ஓடிப்போய், ஒரு வீட்டுக்குள் சென்று தாளிட்டுக் கொள்வார் தேவிகா. அந்த வீடு இயக்குனர் முத்துராமனின் வீடு. காதலை இழந்த சோகத்தில் வீட்டுக்குள் அவர் மது அருந்தி கொண்டு இருப்பார். உடனே தேவிகா அந்த வீட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பார்.
அதே நேரம் கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடும். யார் வெளியே திரிந்தாலும் சுட்டுத்தள்ள உத்தரவு.. வேறு வழியே இல்லாமல் அன்றிரவு முழுவதும் முத்துராமனின் வீட்டில் தேவிகா தங்குவார்.
அவரை தனி அறையில் தங்க வைத்துவிட்டு முத்துராமன் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்வார். பொழுது விடிந்ததும்.. தேவிகா காரில் புறப்பட்டுச் செல்வார்.
அப்போதுதான். இரவில் நகைகளை கழட்டி கைப்பையில் பத்திரப் படுத்தியபோது தனது வைர காதணி ஒன்று முத்துராமன் அறையில் தவறவிட்டு விட்டதை தேவிகா உணர்வார்.
திருப்பி போய் அதனை எடுக்க முயற்சித்தால் தேவையற்ற பிரச்சினைகள் வரும் என்று எண்ணி, அதை அப்படியே விட்டுவிடுவார். ஊரடங்கு தின இரவன்று எங்கு தங்கினார் என்பதை கணவரிடம் சொல்லாமல் தேவிகா தவிர்த்துவிடுவார்..
அதே ஊரடங்கு தின இரவில் தியேட்டர் அதிபரான வில்லன் பாலாஜி படுகொலை செய்யப்பட்டு விடுவார். அந்தப்பழி அப்படியே முத்துராமன் மீது விழும்.. ஏற்கனவே தேவிகாவை அடைய பாலாஜி முயற்சிக்கும்போது, அவரை முத்துராமன் கடுமையாக எச்சரிப்பார்.
பெரிய குடும்பத்திற்கு வாழ்க்கைப் பட்டுப்போன பண்புள்ள ஒரு பெண்ணுக்கும் தனக்கும் இடையே தகாத உறவு என்று சொல்லி களங்கம் கற்பிக்க முயன்றால், கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்று சூளுரைப்பார். அதை அங்கே இருக்கும் இரண்டு வேலைக்காரர்கள் கேட்டு விடுவார்கள்..
இந்த சூழ்நிலைதான், முத்துராமனுக்கு எதிராக, வழக்கில் பலமாக அமையும். கைதின் போது முத்துராமன் வீட்டில் சோதனை நடத்தும் போலீசார் அங்கிருந்து தேவிகாவின் வைரத்தோடை எடுப்பார்கள். அது, அன்றிரவு தன்னுடன் இருந்த பெண்ணின் நகை என்பார் முத்துராமன் ஆனால் அவரை அடையாளம் காட்ட மறுத்து விடுவார்.
கொலை நடந்த அன்றிரவு தன்னுடன்தான் இருந்தார் என்று சம்பந்தப்பட்ட பெண் வந்து சாட்சியம் சொன்னால் முத்துராமனுக்கு விடுதலை கிடைக்கும் என்று நீதி மன்றம் சொல்லும். ஆனாலும் முத்துராமன், தேவிகாவின் கௌரவத்தை குலைக்க கடைசிவரை முன்வரவேமாட்டார்..
ஆனால் அற்புத மனிதரான தனது நாடக குரு நாடக இயக்குனர் முத்துராமனின் உயிர் அநியாயமாக தூக்கு தண்டனையால் போய்விடக்கூடாதே என்ற கவலையில் நீதிமன்றத்தில் ஆஜராகி தேவிகா சாட்சியம் சொல்வார். முத்துராமனும் விடுதலையாகி விடுவார்..
குடும்ப மானத்தை வாங்கி விட்டார் என்று ஜமீன்தார் குடும்பத்தில் இருந்து கணவர் மற்றும் மாமனாராலேயே விரட்டப்பட்டு விடுவார் தேவிகா..
உண்மை கொலையாளி யார்? ஜமீன்தார் குடும்பத்தில் மீண்டும் தேவிகா சேர்கிறாரா என்பதுதான் க்ளைமாக்ஸ் .
படத்தில் முக்கிய சிறப்பம்சம் அழுகுப்பதுமையான தேவிகா ஒற்றை ஆளாக இந்தப் படத்தைத் தன் தோளில் வைத்து முழுவதுமாக சுமந்திருப்பார்.. அதேபோல முத்துராமனும் கனக்கச்சிதமாக தன் பாத்திரத்தை அளவோடு செய்திருப்பார்.
தேவிகாவின் அழகுக்கும் நடனத்திற்கும் கேமரா சரியாக தீனி போட்டது என்றால், பாடல்களில் கண்ணதாசன் வஞ்சகமில்லாமல் வார்த்தைகளை வாரி வாரி அழகுற பின்னி இருப்பார்..
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
உன்னைத்தான் நான் அறிவேன், மன்னவனை யார் அறிவார்
நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ, இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
சின்ன சின்ன கண்ணனுக்கு, என்னதான் புன்னகையோ..
- இப்படி படம் ஆரம்பித்தது முதல் அற்புதமான பாடல்கள், தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.. மெல்லிசை மன்னர்களான எம்எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து வழங்கிய, கேட்க கேட்க தெவிட்டாத பொக்கிஷங்களில், வாழ்க்கை படகு படத்தின் பாடல்களும் ஒன்று..
இந்தப்படத்தில் தேவிகாவின் தாயாராக எம்.வி. ராஜம்மா வழக்கம்போல பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டுக்குள் வரும் மகளைத் தொடர்ந்து பெரிய இடத்துப் பிள்ளையான ஜெமினிகணேசனும் வருவதை பார்ப்பார்... நற்பண்புகள் கொண்ட அவனுக்கும் தன் மகளுக்கும் இடையே ஏதோ பிரச்சினை என்பதை புரிந்துகொண்ட ராஜம்மா பெண்ணின் தாயாக இருந்தாலும் நாகரீகம் கருதி அந்த இடத்தை அவ்வளவு நாசூக்காக கிளம்பி வேறு அறைக்கு போய்விடுவார்...
அதே ஏழைத்தாயான, எம்பி ராஜம்மா சீரும் இன்னொரு இடம் அற்புதமாக இருக்கும்.. குடும்ப மானத்தை வாங்கிய நீங்கள் இனி இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது என்று வீட்டுக்கே வந்து ஜமீன்தார் மிரட்டுவார்.
‘’உங்களுக்கு மட்டும்தான் மானம் இருக்கிறதா? அதே மானம் எனது மகளுக்கு இல்லையா, எங்களுக்கு இல்லையா? என் வீட்டிற்கே வந்து எங்களை வெளியேறச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது எங்கள் வீடு. மரியாதையாக இங்கிருந்து நீங்கள் வெளியே போங்கள்’’ என்று ஜமீன்தாரை வார்த்தைகளால் துளைத்தெடுப்பார்.
வறுமையிலேயே உழன்றாலும் மானத்தை வைரகிரீடமாக சுமக்கும் மானமுள்ள தாய் என்பதை ராஜம்மா காட்டும் விதம் வாவ் ரகமாக இருக்கும்.
படத்தில் சில இடங்களில் லாஜிக் அநியாயத்திற்கு இடிக்கும்.. அவற்றில் மிக முக்கியமான ஒன்று உண்டு. ஜமீன்தார் ரங்காராவின் நெருங்கிய பால்ய காலத்து நண்பரான கான்சாகிப் ஆக வருபவர் டிஎஸ். பாலையா.. ஜமீன்தார் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு மிகவும் நெருக்கம் இருக்கும். ஆனால் பாலையாவின் மனைவியாக வரும் புஷ்பவல்லிக் கு ( ஜெமினிகணேசனின் வாழ்க்கை துணைவி, நடிகை ரேகாவின் அம்மா?) மட்டும் ஜமீன்தார் மருமகளான தேவிகா யார் என்பது தெரியாது..
தங்க இடம் கிடைக்காமல் கர்ப்பிணியாக தாயுடன் வரும் தேவிகா க்கு தனது அவுட் ஹவுசில் தங்க இடம் கொடுத்து குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து பராமரித்து வருவார்.
வேம்பத்தூர் கிட்டு கதை வசனம் எழுதிய வாழ்க்கை படகு படத்தை ஹாலிவுட் சீனுவாசன் எனப்படும் ஸி. சீனுவாசன் என்பவரை இயக்க வைத்து எடுத்திருந்தார் எஸ்.எஸ்.வாசன்.. நாகேஷ்- கீதாஞ்சலி காமடி போர்ஷனும் ரசிக்கும்படி இருக்கும்
பழைய படங்களை பார்க்கவிரும்புவர்கள் இந்த படத்தை கட்டாயம் பார்க்கலாம். யூ டியூப்பில் கிடைக்கிறது..
✍️ஏழுமலை வெங்கடேசன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி