தமிழறிஞர் ம.வே. பசுபதி
தமிழறிஞர் ம.வே. பசுபதி அவர்கள் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரது தமிழ்ப் பணி பற்றி இன்று இணையத்தில் படித்தறிந்தேன்.
தமிழ் இலக்கியத்தின் ஆணிவேராக இருக்கும் தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அவற்றோடு திருக்குறள் முதலான பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் , இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை , மற்றும் முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் உரை ஆகிய நூல்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்காக ஒரே நூலாகத் தொகுக்கும் பணியினை மேற்கொண்டவர் என்பதைப் படித்தபோது இப்பணிக்காக அவர் எவ்வளவு நூல்களைப் படித்து ஒப்பிட்டிருக்கவேண்டும்; பாடபேதங்களை அறிந்து நுணுக்கமாகப் பணியாற்றி இருக்கவேண்டும் என்ற பிரமிப்பு உண்டானது.
அந்நூல் தவிர ஆய்வு நூல்கள், கட்டுரைகள், பதிப்புகள் என ஏறக்குறைய ஐம்பது நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.
அவருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட உ.வே.சா. விருது அவ்வளவு பொருத்தமானது.
கம்பன் கழகக் கவிஞரங்குகளில் அவரது கவிதைகளைத் தூரத்தில் இருந்து கேட்டிருக்கிறேன்.
நான் கல்லூரியில் படித்த காலத்தில் அவர் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய திருப்பனந்தாள் கல்லூரி கும்பகோணத்திற்கு மிக அருகில் இருந்தும் அவரை சந்திக்காமல் போய் விட்டோமே என்ற வருத்தம் மேலிடுகிறது.
ஒரு தமிழ்க் களஞ்சியம் மறைந்திருக்கிறது. தமிழுக்குத் தொண்டு செய்த ஒரு பேருழைப்பாளர் மறைந்திருக்கிறார் .
அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்.
-
பிருந்தா சாரதி
Comments