சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?
சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?
பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும் கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம்.
அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.
அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.
வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களைத் தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
மரத்தடி, குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் இருக்கும் கணபதி விசேஷமானவர். வெட்டவெளியில் வீற்றிருக்கும் கணபதியை நீராட்டி வணங்குவது நமது தொன்றுதொட்ட வழிபாடாக இருந்து வந்திருக்கிறது. 'நீராட்டி, பூச்சூட்டி, தூப தீபமிட்டு தெருப் பிள்ளையாரை வணங்கினால் தீராத வினையெல்லாம் தீரும்’ என்பார்கள்
Comments