ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன்/ பிருந்தா சாரதி
ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன்
--------------------------------------
சிலையாய் நின்ற எம்மை
இயங்க வைத்தவன்
சிலையாய் ஆன பின்பும்
இயங்கி வருபன்.
*
பூதக் கண்ணாடி கொண்டு
செய்திகள் படித்தவன்
பூதங்கள் எங்கெனச்
சொடக்குப் போட்டவன்.
*
துல்லியமாக உண்மையை அறிந்தவன்
துடிப்புடன் பொய்களைச்
சாடி அழித்தவன்.
*
நாளைகள் நமக்கு
வெளிச்சமாகிட
இருட்டை மேனியில்
தூக்கிச் சுமந்தவன்.
*
இருண்ட பாதையில்
ஒளிக்கதிர் பாய்ச்ச
இன்னுயிர் வாழ்வை
இசைவுடன் கொடுத்தவன்.
*
கைத்தடி ஊன்றி
நடந்த காலையும்
முடங்கிய இனமது
நிமிர்ந்திட உழைத்தவன்.
*
தந்தையைப் போலக் கண்டிப்பானவன்
தாயினும் மேலாய்க் கரிசனம் கொண்டவன்.
*
அழுகிய சிந்தனை
அறுத்த மருத்துவன்
அழியாப் புகழுடன்
நிலைத்த பெருமகன்.
*
ஈராயிரம் ஆண்டு
இருட்டை வெளுத்தவன்
ஈரோட்டில் உதித்த
இன்னொரு சூரியன் .
*
_ பிருந்தா சாரதி
*
#பெரியார் #ஈவெரா #அய்யா #நினைவு நாள்
*
நன்றி
ஓவியம்: Trotsky Marudu Maruthappan
Comments