படைப்பு ஆண்டு விழா


 படைப்பு ஆண்டு விழா

*

இந்த நாள் இனிய நாள் என்று நெஞ்சம் மகிழ்ந்த நாள் நேற்று.


பாரதி பிறந்தநாளான நேற்று (டிசம்பர் 11)  'படைப்பு' சங்கமம் விழா ஒரு திருவிழா போல் சென்னையில் உற்சாகத்தோடு நடைபெற்றது.


தமிழின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகள்  வண்ணதாசன், வண்ணநிலவன், யூமா வாசுகி, இந்திரன், வ. ஐ. ச. ஜெயபாலன், கவிஞர் ரவி சுப்ரமணியன்,கவிஞர் கரிகாலன்,  சூழலியலாளர் கோவை சதாசிவம்,  இயக்குனர் மாரி செல்வராஜ்,  வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, ஊடகவியலாளர் ஈரோடு மகேஷ் , பாடலாசிரியர் அருண்பாரதி,  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அற்புத மாற்றிவிட்டார்கள். அவர்களோடு நானும் கலந்து கொண்டேன். 


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வந்திருந்தனர் இளம் படைப்பாளிகள்.


கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல வகைமைகளில் 

84  புத்தகங்கள் வெளியிடப்பட்டன.  நூற்றுக்கும் மேலானவர்களுக்கு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. 


எழுத்தாளர் வண்ணதாசன், எழுத்தாளர் யூமா வாசுகி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


என்னுடைய 'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்', 'பச்சையம் என்பது பச்சை ரத்தம்' ஆகிய ஹைக்கூ நூல்களும் , என் 'மீன்கள் உறங்கும் குளம்' ஹைக்கூ நூலை முன்வைத்து பொறியாளர் கோ. லீலா அவர்கள் எழுதிய 'ஹைக்கூ தூண்டிலில் ஜென்' ஆகிய மூன்று நூல்களும் அவற்றுடன் வெளியிடப்பட்டன. 


'மறைநீர்' எனும் நீர் ஆதாரம் குறித்த பொறியாளர் கோ.லீலா அவர்களின் விழிப்புணர்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். 'லிலித்தும் ஆதாமும்' என்ற பெண்ணியச் சிந்தனை நூலை எழுதிய கல்லூரி விரிவுரையாளர் நவீனா அவர்கள் அதை மொழிபெயர்த்திருந்தார். ஆங்கிலப் பதிப்பில் படைப்பு ஈடுபடுவது ஒரு குறிப்பிடத் தகுந்த நகர்வு.


வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டு நூல்களை எழுதி  இந்த படைப்பு விழாவில் அவர்கள் வராமலேயே கூட வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.


வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் இவற்றிலிருந்தும் பலர் முந்தைய ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டதைக் கண்டிருக்கிறேன். இப்போது கொரானா காலமாததலால் அவர்கள் இவ்வாண்டு வர இயலவில்லை என்றார்கள். 


எல்லாவற்றையும் விட மேலாக முகநூலில் மட்டுமே அறிமுகமான பலர் நெருங்கிய நண்பர்களாக ஒருவரோடு ஒருவர் பழகியதையும், நலம் விசாரித்துக்கொண்டதையும், செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததையும் காணக் கண் கோடி வேண்டும்.


'படைப்பு' ஆண்டு விழாவை

நான் முதலாண்டில் இருந்து கவனித்து வருகிறேன். ஆண்டுதோறும் அதன் வளர்ச்சி கண்கூடாகத் தெரிகிறது. இன்று 86 ஆயிரம் பேருக்கு மேல் அதன் உறுப்பினர்களாக உள்ளனர் என்று படைப்பு நிர்வாகி கவிஞர் ஆஸ்மி அவர்கள் மேடையில் கூறிய போது அறிந்தேன்.


ஒரு கலை இலக்கிய எழுச்சியை படைப்புக் குழுமம் இளைஞர்களிடம் உருவாக்கி வருவது புரிகிறது. 


ஆங்கிலக்கல்வி தமிழ் எழுதுவதையும் படிப்பதையும் அடியோடு சாய்த்து வருகிற இந்த நாளில் இத்தனை இளம் படைப்பாளிகள் தமிழில் எழுத வந்திருப்பது ஒரு மாபெரும் இலக்கியச் சாதனை. அதனை உருவாக்கிய படைப்புக் குழுமத்திற்கு - குடும்பத்திற்கு - என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.💐💐💐

*

அன்புடன்,

பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி